கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 4 பேரை சென்னை ஜே.ஜே.நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 4-ம் தேதி, மொபைல் செயலி மூலம் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்தாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது 41, மற்றும் அவரது தம்பி ஜெயமுஜின் 37, உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பதிவான எண்களை வைத்து, இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர்.
அதில், கேரளாவை சேர்ந்த ஆசிப் (21), முகமது (21) ஆகியோர் காட்டாங்கொளத்தூர் பகுதியில் தங்கி, மாணவர்களுக்கு கஞ்சா ஆயில் விற்பனை செய்தது தெரிந்தது. கடந்த மாதம் 30ம் தேதி, அவர்கர் கைது செய்யப்பட்டனர். ரூ.75,000 மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் செல்போனில் பதிவாகி இருந்த எண்களை ஆய்வு செய்தபோது, பிரபல தமிழ் திரைப்பட நடிகரின் மகனின் எண்ணும் இருந்துள்ளது. அதாவது நடிகர் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது. பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று திருமங்கலம் போலீசார் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அலிகான் துக்ளக், செயது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது உள்ளிட்ட 4 பேரும் இன்று(டிச.4) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான அனைவரும் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அனைவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“