அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகமும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், " அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு ஜோ பைடன், துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரது மூதாதையர் கிராமமான துளசேந்திரபுரம் உலக வரலாற்றில் ஒரு இடத்தைக் காண்கிறது" என்று தெரிவித்தார்.
நடிகர் விவேக்: இது பெண்மைக்கான வெற்றி! இந்தியா தாய் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறது !! என்று நடிகர் விவேக் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
ஜெயம் ரவி: அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு சிறப்பு வாழ்த்துகள். எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் சாதகமான பயணத்தை எதிர்நோக்குகிறோம்.
கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2020 இல் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் நம் தமிழ் சொந்தம் என்பதில் பெரிய பெருமை என்று நடிகர் சவுந்தர ராஜா தெரிவித்தார்.
சரத் குமார் தனது ட்விட்டர் பிரிவில், "அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு ஜோ பைடன், துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். தங்கள் நாட்டை மேம்படுத்துவதற்கும், உலக அளவில் அமைதியை உருவாக்குவதற்கும் தேவையான மாற்று சிந்தனைக்கான விதைகளை விதைப்பார்கள் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.