சர்ச்சைக்குள் சிக்குவதில் அவர் மன்னர்தான். கவிஞர் ஒருவரைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசி, கட்சிக்கு பெரிய அளவில் தலைகுனிவை ஏற்படுத்தினார். அதன் பின்னர் டெல்லியில் இருந்து வந்த, அமைப்பு பொது செயலாளர் வாய்ப்பூட்டு போட்டிருந்தார். அதன் பின்னர் அடக்கி வாசித்த அவர், இப்போது சமூக வலை தளம் மூலமாக கருத்தை பதிவிட்டு, சிக்கிக் கொண்டார்.
இம்முறை தேசிய தலைவரே கடுமையாக திட்டியுள்ளார். மன்னர் விஷயத்தில் கருத்து சொல்லாமல் இருந்த மூத்த தலைவர்கள் இருவரையும் கட்சி தலைமை அழைத்து கண்டிக்க சொன்னதாம். அதன் பின்னர்தான் அந்த மத்திய அமைச்சரே கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.
இதனிடையே தேசிய தலைமையிடம் மன்னிப்புக் கேட்டதோடு, அட்மின் மீது பழியை போட்டு தப்பிவிட்டார், மன்னர். அட்மின் செய்த தவறு என்று சொன்னதும், ஏற்கனவே பல தலைவர்களுக்கு இப்படியான சிக்கல்கள் வந்திருப்பதால், கட்சியில் இருந்து நீக்காமல் விட்டுவிட்டார்கள்.
விஷயம் இப்படியிருக்க, மன்னரின் ஆதரவாளர்கள், திருப்பத்தூரில் சிலையை உடைத்தவரை கட்சியை விட்டு நீக்கியதற்காக, மாநில தலைவர் மீது சமூக வலை தளங்களில் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள், மன்னரின் ஆதர்வாளர்கள். இந்நிலையில் சென்னை வந்த மன்னருக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். அதற்கு முதல் நாள் சொந்த ஊரில் மன்னர் மீது செருப்பு வீசப்பட்டது. சென்னையில் அது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என உளவுத்துறை தகவல் சொன்னதால், மன்னரே வரவேற்பு வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.