தமிழகத்தை சேர்ந்த கடல்சார் தமிழர் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சென்னையில் இன்று மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் சிவ பாலசுப்பிரமணியன். இவர் ஒரிசாவில் பணியாற்றியதால் ஒரிசா பாலு என்று அழைக்கப்பட்ட இவர், ஒரிசா தமிழ் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து கடல்சார் பயணங்கள் தொடர்பான ஆய்வுகளில் இறங்கினார்.
இந்தியா முழுவதும் சுற்றியள்ள இவர், சுரங்கம் மற்றும் வெளிநாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ள இவர், ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர்.
10-க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், தனது இறுதிகாலம் வரை தனது கோணத்திலான ஆய்வுப்பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழர்களின் வரலாற்றுத் தொடர்புகளை கடல்வழியே தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வந்தவர். தன்னலம் கருதாத தமிழ்நலம் காக்கும் அவரது உழைப்பும் ஆர்வமும் என்றும் மதிக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“