புதுச்சேரி அரசு மருத்துவமனையில், போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ரோடியர் பேட், அங்கு நாயக்கர் தோப்பை சேர்ந்தவர் அப்துல் காதர்,(21). இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழக காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 25ம் தேதி பைக் திருட்டு வழக்கில், அப்துல் காதரை, பெரியக்கடை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அப்துல் காதரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதனிடையே சிறையில் அப்துல் காதர் உடல் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரை, சிறை காவலர்கள் நேற்று முன்தினம் மாலை, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அப்துல் காதருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால், சற்று நேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.
அப்போது கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அப்துல் காதர், வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனையடுத்து சிறை காவலர்கள் மருத்துவமனை முழுதும் தேடியபோது அப்துல் காதர் தப்பிச்சென்றது தெரிய வந்தது.இது குறித்து சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கபிலன் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து அப்துல் காதரை தேடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil