/tamil-ie/media/media_files/uploads/2020/11/madurai-bench-high-court.jpg)
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தமிழகத்தில் கண்டுபுடிக்கப்பட்ட பழங்கால தொன்மையான கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை மைசூர் கல்வெட்டு தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளன. முதலில், சென்னையில் இருந்த அந்த அலுவலகம் தட்பவெப்பநிலை காரணமாக ஊட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் மைசூர் கல்வெட்டு தலைமையகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது. மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அழிக்கப்படலாம் என்ற கூற்று கல்வெட்டியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இருந்து வந்தது.
முன்னதாக, மைசூரிலுள்ள கல்வெட்டியல் துறையை தமிழகத்திற்கு மாற்றும்படியும், தமிழ் கல்வெட்டுக்கு என தனியாக ஒரு மத்திய கல்வெட்டு அலுவலகத்தை சென்னையில் துவங்கும்படியும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்தியக் கல்வெட்டுகள் தொடர்பான 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழகக் கல்வெட்டுகள் இந்தியக் கல்வெட்டுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. கல்வெட்டுகளின் எண்ணிக்கை, செப்பேடுகளின் எண்ணிக்கை ஆகிய எல்லா பிரிவுகளிலும் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் தமிழகமே முதலிடம் வகிக்கிறது.
தமிழ்க் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20,000 ஆகும். அதனை அடுத்து கன்னடம் 10,600, சமஸ்கிருதம் 7,500, தெலுங்கு 4,500 என இடம் பெறுகின்றன. தமிழ்க் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.