Tamil language paper mandatory : டி.என்.பி.எஸ்.சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறும் நபர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இனி வரும் காலங்களில் இந்த தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகள் மற்றும் இதர மாநில அரசு பணிகளில் 100% தமிழர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்யவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30%-ல் இருந்து 40% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். மாற்றங்களை ஊக்குவிக்க பாலின சமத்துவம் அவசியம். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கோவிட் -19-ல் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த தமிழ் வழி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். அரசு பணிகளில் சேர்வதற்கான உச்ச வரம்பு, கொரோனா தொற்று காலத்தை கருத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மேம்பாட்டுக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அதன்படி, தடையின்றி மின்சாரம் வழங்க 500kva மின்சாரம் வழங்கும் இரண்டு மின்மாற்றிகள் வழங்கப்படும். மேலும் அந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரூ. 3.5 கோடி மதிப்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த மேலாண்மை நிறுவனம் முறையான பயிற்சிகளை பெறாத மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் இதர நபர்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil