Petrol and Diesel Price: சென்னையில் 104-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: தமிழகத்தில் இன்று நர்சரி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் இன்று முதல் அனுமதிக்கப்படுகின்றன.
வேலைக்காக காத்திருப்பு: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 75 லட்சம் பேர் காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்: திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது தொடர்பாக திருவண்ணாமலை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
India News Update: உத்தரப் பிரதேச இரண்டாம் கட்ட தேர்தலில் 64.4 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரசில் இருந்து விலகல்: உத்வேகம் தருகிற கட்சித் தலைமை இல்லை எனக் கூறி முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
Corona update: உலகளவில் இதுவரை 41.57 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 33.84 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
அரியானாவில் தற்போதுள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அரியானா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நிதுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், ஜான் சத்யன் ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முதல் டி20 : இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ். இந்த போடடியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்
கேரளாவில் மேலும் 12,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பேர் மரணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு தற்போது 1.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், குடியாத்தம் அருகே ஆந்திராவிலிருந்து வந்த காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும், ஜூன் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ள அண்ணா பல்கலைகழகம், ஜூன் 13ஆம் தேதி செய்முறைத் தேர்வும், ஜூன் 22ஆம் தேதி செமஸ்டர் எழுத்துத் தேர்வும் தொடங்கும் என்றும் கூறியுள்ளது
கோவாவில் பாஜக பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் அப்போது, ஆங்கிலேயர்கள் வந்து இறங்கியது திருவள்ளூர் மாவட்டம் தான் திருவள்ளூர் மாவட்டத்தை நவீன மாவட்டமாக மாற்றியது திமுக அரசு தான் என்று கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 : டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ள நிலையில், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார்.
எரிசக்தி மற்றும் ஆதாரவள நிறுவனத்தின் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வழியாக 'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்' என்பதே எங்களது நோக்கம் என்று கூறியுள்ளார்.
உங்களில் ஒருவன் எனும் தனது சுயசரிதை நூலை சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
45வது சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தகக் கண்காட்சி தேதியை தள்ளிவைத்தது முதலில் சிரமமாகத்தான் இருந்தது. மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும். மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படுகிறது என்று கூறினார்.
45வது சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை வழங்கினார்.
சென்னை, நந்தனத்தில் 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை 19 நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் சிம்புவுக்கு எதிரான புகாரில் ஆதாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. தேர்தல் பணிகள், பணப்பட்டுவாடா தடுப்பு, சோதனை அதிகரிப்பு குறித்து காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக காற்றில் பறக்கவிட்டுள்ளது என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், வேட்பாளர்களும் மிரட்டப்படுகிறார்கள் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்
சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்து விட்டதால், மாநில அரசின் நிதியே பயன்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது
ஐபிஎல் போட்டிகளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, “எங்கே ஒரு மாநிலத்தில் பாஜக உறுதியாகக் காலூன்றுகிறதோ, டெல்லியிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சியை நடத்துபவர்கள் அந்த மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்” என்று கூறினார்.
“அமைதியும் வளர்ச்சியும் எங்கெல்லாம் வந்தாலும் ஊழல் ஒழிந்துவிடும். இந்த முறை பஞ்சாபிலும் அதையே செய்ய வேண்டும்” என்று பதான்கோட்டில் நடந்த பேரணியில் அவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சீர் கோவர்தன்பூரில் உள்ள சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளில் காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி புதன்கிழமை பிரார்த்தனை செய்தனர்.
“பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த பதன்கோட் நிலத்தைத் தாக்கியபோது, முழு நாடும் ஒன்றுபட்டிருந்தது, ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் நமது ஆயுதப் படைகளின் திறனைக் கேள்வி எழுப்பினர், சந்தேகங்களை எழுப்பினர், நமது தியாகிகளின் தியாகம் குறித்து கேள்வி எழுப்பினர். புல்வாமா தாக்குதலின் நினைவுநாளில், நமது ராணுவ வீரர்களின் திறமைக்கான சான்றுகள் குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகின்றனர். பஞ்சாப் போன்ற எல்லையோர மாநிலத்தின் பாதுகாப்பை இப்படிப்பட்டவர்களின் கைகளில் கொடுப்பதற்கு நம்பலாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பதான்கோட்டில் மோடி கூறினார்.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்களை தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
ஆம் ஆத்மி கட்சியை குறிப்பிட்டு, பிரதமர் மோடி செவ்வாயன்று, “இப்போது காங்கிரசும் “குற்றத்தில் ஒரு பங்காளியை” கண்டுபிடித்துள்ளது. ராமர் கோவிலுக்கு, இந்த இரு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன, இரு கட்சிகளும் நமது வீரர்களின் தியாகத்தை கேள்விக்குள்ளாக்கின.
“ஒரு கட்சி பஞ்சாப் இளைஞர்களை போதைக்கு தள்ளியுள்ளது, மற்றொன்று டெல்லியை மதுவிற்குள் தள்ளியுள்ளது. இப்போது இந்த இரண்டு கட்சிகளும் பஞ்சாபில் WWF செய்கின்றன. டெல்லியில் ஆம் ஆத்மி காங்கிரஸின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். காங்கிரஸ் அசல் என்றால், இந்த மற்றொரு கட்சி அதன் நகல்” என்று மோடி கூறினார்.
மேலும், “இந்த முறை பாஜக ஆட்சிக்கு வரும் என்பதை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் மோடிக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக மட்டுமே பேசுகிறார்கள் என்றும் மோடி கூறினார்
பதன்கோட்டில் வாக்காளர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “நாங்கள் பஞ்சாபில் நெடுஞ்சாலைகளை உருவாக்கியுள்ளோம். டெல்லி-கத்ரா விரைவுச்சாலை பஞ்சாப் வழியாக செல்கிறது, மேலும் இது பஞ்சாப் மக்களுக்கு வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு புதிய வழிகளை வழங்கும்” என்றார்.
“நாங்கள் லூதியானா-வங்காள வழித்தடத்தை உருவாக்குகிறோம். பஞ்சாபில் அதிக விமான நிலையங்களைப் பெறுவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். PGI செயற்கைக்கோள் மையங்களும் அமைக்கப்படுகின்றன,” என்று மோடி கூறினார்.
“நாங்கள் பஞ்சாபிலும் உணவுப் பூங்காக்களை உருவாக்கியுள்ளோம். பஞ்சாப் விவசாயிகளுக்கு MSPயில் சாதனை பயிர் கொள்முதல் நடக்கிறது,” என்று பிரதமர் கூறினார், பாஜக 'நவ பஞ்சாப்' பற்றிய தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளது. “பதான்கோட் போன்ற வளரும் பகுதிகளுக்கு எல்லை மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்குவோம்” என்று அவர் மேலும் கூறினார்.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், மேற்கூறிய விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
சென்னை ஓட்டேரியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ஜெயக்குமார், நகர்ப்புற தேர்தலில் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் , அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் காபியாக ஆம் ஆத்மி கட்சி உள்ளது என பஞ்சாப் மாநிலம் பதான்கோட் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். மையங்களை மாற்றுவது தொடர்பாக தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் எதிர்ப்பு சட்ட மசோதாவுக்கு ஒருபோதும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரப்போவதில்லை; லாவண்யா தற்கொலைக்கு நீதி கோரி ஏ.பி.வி.பி. நடத்தும் போராட்டங்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்று திமுக அரசு அறிவித்துள்ளது. 35 லட்சம் பேரிடம் வட்டி வாங்கி 13 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்றும், திமுக அரசு அறிவித்தப்படி நகைக்கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றும் ஒசூர் மாநகராட்சி வார்டுகளில் ஈ.பி.எஸ். பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கோவில்களுக்கு சொந்தமான ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தேசிய தலைமை பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இல்லத்திற்குள் நுழைய முயன்றவரை கைது செய்தது காவல்துறை. அத்துமீறி நுழைய முயன்றவர் மனநலம் பாதித்தவர் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம். அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களம் இறங்கிய 12 அதிமுகவினரை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்துள்ளது அதிமுக தலைமை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்து வருகிறார். கடை கடையாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாக்கு சேகரிப்பு
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாக உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இழப்பீடாக செலுத்திய ₨68 கோடியை திரும்ப பெறுவதாகவும் சென்னை வருவாய் கோட்டாட்சியர் மனுவில் கூறப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியான விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவர் சந்தீப் சேத் தலையிலான 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைப்ப்பு
மழலையர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்தியாவில் மேலும் 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,27,23,558 ஆக அதிகரிப்பு என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி செய்த தம்பதியர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி கரோல் பாகில் உள்ள ரவிதாஸ் ஆலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவால் காலமானார்.
ஈரோடு அந்தியூர் அருகே திமுக வேட்பாளர் எம்.ஐயப்பன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சென்னையில் 3-வது மாடி வீட்டினுள் உள் பக்கமாக பூட்டி சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 7 வயது சிறுமி சாய் கிராணா தனது வீட்டிற்குள் யாருமில்லாத நேரத்தில் உள் பக்கமாக பூட்டிக் கொண்டார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.