தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட இளைஞரணி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று (டிசம்பர் 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் கண்ணன், மாவட்டத் தலைவர் வி.வி.வாசன் , மூத்த நிர்வாகி குனியமுத்தூர் ஆறுமுகம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க கண்டித்தும், பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், “வருகின்ற நாட்களில் கொங்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். தி.மு.க அரசு பொய்யான வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்துள்ளது. நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, விவசாய கடன்கள் தள்ளுபடி போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்த நிலையில் 99 சதவிகிதம் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

தற்பொழுது தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களை பொறுத்தவரை எப்படி சம்பாதித்துக் கொள்ளலாம், எப்படி எதிர்க்கட்சிகளை அடக்கலாம் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்த 18 மாதங்களில் ஒரு குடும்பத்திலிருந்து 3000 ரூபாய் பொதுமக்களிடமிருந்து சுரண்டியுள்ளது” என்றார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வாட்ச் விவகாரம் குறித்து பேசிய அவர், “அண்ணாமலை 3.50 லட்சம் ரூபாய்க்கு வாட்ச் கட்டினால் என்ன? 5 லட்சம் ரூபாய்க்கு வாட்ச் கட்டினால் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது உள்ள விலைவாசி உயர்வு பிரச்சனையை மறைப்பதற்காகவே பேசுகிறார்.

அதேபோல் அதிமுக கட்சியில் என்ன பிரச்சினையாக இருந்தால் திமுகவிற்கு என்ன என கேள்வி எழுப்பினார். திமுக இவ்வாறு பேசுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” என்றார்.
தொடர்ந்து, “கோவை மாவட்டம் தற்போது இத்தனை வளர்ச்சியை கண்டுள்ளதற்கு காரணம் இதற்கு முன்னாள் இருந்த அதிமுக கட்சிதான். அவர்கள் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தான் காரணம் என்றார். மக்கள் வரிப்பணத்தை சுரண்டுவதற்காகவே ஏற்கனவே பல கோடி செலவழித்து கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை நிறுத்தி தற்போது புதிதாக வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டு உள்ளனர். தற்போது எதற்காக அவசர அவசரமாக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்.
உதயநிதி சினிமா துறையை மிரட்டி அவரது கையில் வைத்துள்ளார். அவர் Red Giant நிறுவனத்திலிருந்து வெளியில் வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். பொங்கலுக்கு பொதுமக்களுக்கு 5000 ரூபாயை அளிக்க வேண்டும். சிப்காட் நிறுவனத்தால் ஏற்கனவே பெருந்துறை பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, தற்போது எதற்காக கோவை அன்னூரில்அவ்வாறான நிறுவனங்களை கொண்டு வர வேண்டும். தமிழக அரசு அனுமதி தரக் கூடாது” எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை.