தமிழ்நாட்டில் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் அதிமுகஎடப்பாடி அணி, அதிமுகஓபிஎஸ் அணி இரண்டு அணிகளாக கட்சி பிளவு பட்டது. இந்த நிலையில் எடப்பாடி தலைமையை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற முதல் விசாரணையின் போது இந்த வழக்கு முடியும் வரை எடப்பாடி பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கக் கூடாது என தடை விதித்தது.
இந்த சூழலில், தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர வேண்டும், அவர் முதல்வராக வரவேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு தர்காக்களுக்கு ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரில் நர்தர்ஷா பள்ளி வாசல், புறநகரில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பாவா பக்ருதீன் தா்ஹா, இனாம் குளத்தூரில் உள்ள தர்கா என பல்வேறு தர்காக்களுக்கும் அதிமுக அவைத் தலைவா் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவினா் சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனா்.
மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி பகுதிக்கு வந்த அதிமுக அவைத் தலைவா் அ.தமிழ்மகன் உசேனுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மகன்உசேன்; தமிழ்நாடு இன்று சுடுகாடாய் மாறிக் கொண்டிருக்கிறது பல்வேறு பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் இந்த அரசு உள்ளது. மக்களுடைய இதயங்களை தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமைகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் விவகாரம் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கின்றது. அதேபோல், விலைவாசி உயர்வு மட்டும் அல்ல மின் கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி உயர்வு எல்லா விலையும் உயர்த்தி விட்டு இன்று ஆட்சிக் கட்டிலில் இருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எப்போது வீட்டுக்கு அனுப்புவது, எப்போது சட்டமன்றத் தேர்தல் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள். கடந்த மாதம் எனது ஆன்மிக பணியை தொடங்கினேன் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன் சென்ற இடமெல்லாம் அதிமுகவுக்கு பிரம்மாண்ட எழுச்சியிருக்கின்றது.
ஆன்மிக சுற்றுப்பயணம் வாக்குகளை தருமா என்ற கேள்விக்கு, நிச்சயமாக பெற்று தரும். அதிமுக இன்றைய தினம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் அல்ல, சிறுபான்மை மக்களுக்கும் உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறது. விரைவில் தேர்தல் வரும்போது சிறுபான்மை சமூகம் யாருக்கு ஆதரவு என்று பாருங்கள் என தெரிவித்தார்.
திருச்சி மாநகர், புறநகரில் நடைபெற்ற துவா செய்யும் நிகழ்ச்சிகளில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு, முன்னாள் துணை மேயர் சீனிவாசன், ஆவின் கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சந்திரசேகர், செ.சின்னச்சாமி, மாவட்டப் பொருளாளா் நெட்ஸ் எம்.இளங்கோ, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம்.முகமது இஸ்மாயில், பேரூா் செயலா் திருமலைச்சாமிநாதன், எஸ்.கே.டி. கார்த்திக், ஒன்றியச் செயலா்கள் என்.சேது, பி.வி.கே. பழனிசாமி, என்.அன்பரசன், மணப்பாறை நகரச் செயலா் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”