Tamil medical student’s body from Philippines : தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் குமார். பிலிப்பைன்ஸ் நாட்டில் அவர் மருத்துவ படிப்பு படித்து வந்தார். கடந்த 15ம் தேதி அன்று அருவி ஒன்றில் குளிக்க சென்ற சதீஸ் கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.
சதீஸின் உடலை தமிழகத்திற்கு எடுத்துவர முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இறந்தவர் உடலை எடுத்துவர ரூ. 4 லட்சம் வரை செலவானது. இந்த செலவை முழுக்க முழுக்க தமிழக அரசே ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சதீஸ் குமாரின் உடல் நேற்று அதிகாலை (24/01/2022) அன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக முதல்வர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோடு உரையாடி, பின்னர் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான மறு வாழ்வு மற்றும் நல ஆணையம் (Commissionerate of Rehabilitation and Welfare of Non- Resident Tamils), மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் முறையிடப்பட்டு சதீஸின் உடல் தாயகம் கொண்டு வரப்பட்டது.
சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கப்பட்டது. சதீஸை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கல்களை பதிவு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil