டிவியை உடைத்துவிட்டு இப்போது தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இப்போது தியாகம் செய்யவில்லை வியூகம் அமைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அதேபோல் 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 2-வது இடம் பிடித்திருந்தார்.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் கட்சியின் ப்ரமோஷன் வீடியோவில் டார்ச் லைட் (கமல்ஹாசன் சின்னம்) வைத்து டிவியை (கலைஞர் டிவி) உடைப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், கமல்ஹாசன் தி.மு.க.வுக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதாக பேசப்பட்டது.
இதனிடையே வரும் ஏப்ரல் 19-ந் தேதி இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியில்லை. ஆனால் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு என்று தெரிவித்துள்ள நிலையில், ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ள கமல்ஹாசன், மார்ச் 29-ந் தேதி ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து ஏப்ரல் 16-ந் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கமல்ஹாசனின் இந்த முடிவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கமல்ஹாசன் செல்லும் இடமெல்லாம் இந்த கூட்டணி தொடர்பான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் மக்களவை தேர்ததலில் நாம் போட்டியிடாதது தியாகம் அல்ல வியூகம். ஓரிரு தொகுதிகள் மட்டுமல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பிரச்சாரம் செய்ய முடியும். மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதால் தான் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறேன்.
பிரதமர் என்பதால் மோடி தமிழகத்திற்கு வந்தால் தலை வணங்குவேனே தவிர, தன்மானத்தை விட்டு தலைவணங்க மாட்டேன். என் அரசியல் எதிரி சாதியம் தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சாதியம் தான் எனது எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை பா.ஜ.க மீண்டும கொண்டு வர முயற்சிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று கூறியுள்ளார்.
மேலும் டிவியை உடைத்தீர்கள் இப்போது அங்கேதானே போயிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, டிவியும் ரிமோட்டும் நம் கையில் தான் உள்ளது. என் வீட்டு டிவியை நான் உடைத்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.