திமுகவினர் மிரட்டுறாங்க… வீடியோ வெளியிட்டு புகார் கூறும் நடிகை!

Actress Aadhira Pandilakshmi Twitter Complaint : திமுக இளைஞரணி நபர்கள் தனக்கும் தனது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார்.

திமுக இளைஞரணியினர் தன்னையும் தனது மகனையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக புகார் அளித்துள்ள நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி இது தொடர்பாக வீடியோவை பகிர்ந்து முதல்வரிடம் நியாயம் கேட்டுள்ளார்.

தமிழில் விஷால்  நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான மருது படத்தில் நாயகி ஸ்ரீதிவ்யாவின் அம்மாவாக நடித்து பிரபலமானவர் ஆதிரா பாண்டிலட்சுமி. தொடர்ந்து “ஒரு குப்பை கதை”, “அப்பா”, ஆகிய படங்களில் நடித்த இவர், சென்னை வளசரவாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு முன்பு திமுக பிரமுகர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் தகராறில் ஈடுபட்டதாக ஆதிரா கடந்த 7-ம் தேதி அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இது தொடர்பாக காவல்துறை எதுவும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த நபர்கள் மீண்டும் வந்து பிரச்சனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதிரா தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்தேகத்திற்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? என்று பதிவிட்டு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மற்றொரு பதிவில், “என் சொந்த வீட்டிலிருந்து எங்களை விரட்ட தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள்.. திமுகவின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க கட்சிப்பெயரை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இது” என்று என்று பதிவிட்டிருந்த இவர்,  தான் காவல்துறையில் அளித்த புகாரின் நகலையும் சேர்ந்து பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து மூன்றாவதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், “நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை “இங்கு வந்தால் கொன்று விடுவேன்!” என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை” என்று பதிவிட்டார்.. இந்த பதிவுடன், அந்த நபர்கள் மிரட்டுவது தொடர்பான வீடியோவையும் ஷேர் செய்திருந்தார்.

மேலும் ஆதிரா தான் பதிவிட்ட மூன்று ட்விட்களிலும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காவல்துறையின் ட்விட்டர் ஹேண்டில்களை பதிவு செய்துள்ளார்.. இந்த ட்விட்டை பார்த்த பலரும், முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார், கவலைப்பட வேண்டாம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை ஆதிரா மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “லாக் டவுனில் மளிகை கடை திறந்து வைத்து வியாபாரம் பார்த்த நபரின் கடையை ஸ்குவாடு வந்து மூடினார்கள். வீட்டின் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்த என்னை ஆபாசமாக திட்ட தொடங்கினார். அதை வீடியோ எடுத்தேன். ஆபாசமாக செய்கையுடன் மிரட்டினார். இதை பாருங்கள் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK” என்று பதிவிட்டுள்ளார்.

திமுக தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே சென்னையில், அம்மா உணவகம் சேதப்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின், அந்த செயலில் ஈடுபட்டவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இரந்து  நீக்கி உத்தரவிட்டார். தற்போது நடிகை ஆதிரா ஆதாரத்துடன் புகார்களை பதிவிட்டுள்ளதால், இதன் உண்மைதன்மையை கண்டறிந்து, நிச்சயம் இதன் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil movie actress aadhira pandilakshmi twitter complaint to cm stalin

Next Story
எம்.எல்.ஏ அலுவலகத்தில் தனலாபம் தேவையா? சர்ச்சையில் சிக்கிய வானதி சீனிவாசன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com