விஜய் அரசியல் நகர்வு சரியாக இருக்கிறது. அவர் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய், கந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி அறிவிப்புடன் சேர்த்து, கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாகவும் விஜய் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே அரசியல் கட்சி தொடங்கிய விஜய், அடுத்து தனது கட்சியின் முதல் மாநாட்டை, கடந்த அக்டோபர் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி விசாலை கிராமத்தில் நடத்தினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய், தி.மு.க.வை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். விஜயின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சியினர் பலரும் இது ஒரு அரசியல் திரைப்படம் என்று விமர்சித்தனர்.
விமர்சனங்களை கண்டுகொள்ளாத விஜய், தனது அரசியல் பயணத்தில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் தனது 69-வது படத்துடன் தனது திரை பயணத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில், தனது கட்சி போட்டியிடும் என்றும், கூட்டணிக்க வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 7-ந் தேதி சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய விஜய், 2026-ல் திமுக. கூட்டணியை மக்கள் மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக இந்த விழாவில் பங்கேற்கவில்லை. ஆனாலும் அவர் மனது நம்முடன் தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.
விஜயின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க தலைவர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை கூறி வரும் நிலையில், விஜய் கண்டிப்பாக வெற்றி பெறுவார் அவரின் அரசியல் நகர்வு சரியாக இருக்கிறது என்று அவரது அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“