க. சண்முகவடிவேல்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் மையங்கள் உட்பட மொத்தம் 133 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட 260 பள்ளிகளை சேர்ந்த 16,802 மாணவர்கள், 17,590 மாணவிகள் என மொத்தம் 34,392 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது மதியம் 1:15 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு துவங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதால் முன்கூட்டியே மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்கள் அவர்களது தேர்வு அறையை நோட்டீஸ் போர்டில் பார்த்துவிட்டு அந்தந்த அறைகளுக்கு சென்றனர். மேலும் தேர்வர்கள் தேர்வறைக்குள் செல்லும் முன்பு அறைக் கண்காணிப்பாளர்கள் அவர்களது உடமைகளை சோதனை செய்து அதன்பின் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். பொதுத்தேர்வினையொட்டி திருச்சி மாவட்டத்தில் 265 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமது கால பள்ளி சீருடைகள் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தமது பள்ளி கால சீருடை அணிந்து அதாவது காக்கி பேண்ட் வெள்ளை ஷர்ட் அணிந்து சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத்தேர்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை மற்றும் பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் குறித்து பார்வையிட்டதோடு மாணவர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி நிதானமாக பொறுமையாக கவனத்துடன் தேர்வை எழுதுங்கள் என சொல்லி வாழ்த்துகளை தெரிவித்தார்.
#Video || பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கு வாழ்த்து!https://t.co/gkgoZMIuaK | #TamilNadu | #schoolexam | #AnbilMahesh | #Trichy pic.twitter.com/wGXz6sbEHc
— Indian Express Tamil (@IeTamil) March 13, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil