கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஈரான் படகுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்களை மீட்க மத்திய கிழக்கு நாட்டிலிருந்து விமானத்தை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் பாதிப்புகு ஈரானில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து ஈரானில்தான் அதிக கொரோனா வைரஸ் பாதிப்பு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து உதவி கோரி வெளியிட்டுள்ள ஒரு எமர்ஜென்ஸி வீடியோவில், ஈரானின் கிஷ் தீவில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் தமிழில் அவசர உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், அவர்களுடய படகில் உணவு மற்றும் எரிபொருள் பொருட்கள் தீர்ந்துவிட்டன என்றும் அவர்கள் தங்களை நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முகமூடிகள் கூட இல்லை என்றும் கூறுகிறார்கள்.
துபாயில் இருந்து ஈரானுக்குச் சென்ற இந்த மீனவர்களுக்கு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு உணவு இருப்பதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜான்சன் என்ற செயற்பாட்டாளர் ஒரு வீடியோ கிளிப்பில் கூறியுள்ளார். மேலும், அதில், “ஒரு நபர் பாதிக்கப்பட்டாலும், மீதமுள்ள 400 நூறு பேரை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். கிஷ் தீவுக்கு அருகில் ஒரு விமான நிலையம் உள்ளது. அவர்களை எளிதாக விமானத்தில் ஏற்றிச் செல்ல முடியும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவர் “மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கனவே மத்திய அரசிடம் இந்த விவகாரத்தைப் பற்றி கவலை தெரிவித்துள்ள நிலையில், துன்பத்தில் உள்ள குடும்பத்தினர் தங்களுக்கு இன்னும் உதவி கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
ஈரானின் அஜலுரில் சிக்கித் தவிக்கும் கேரளாவைச் சேர்ந்த சுமார் 60 மீனவர்களும் இதேபோன்ற முறையீடுகளை செய்துள்ளனர். “நாங்கள் ஈரானில் உள்ள அஜலுரில் சிக்கித் தவிக்கிறோம். இந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதால் நாங்கள் எங்கள் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். வெளியேற முடியாது” என்று ஒரு நபர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள எமர்ஜென்ஸி வீடியோவில் கூறுகிறார். அந்த வீடியோவில், அங்கே அவர் ஒரு அறையில் நின்று கொண்டு அங்குள்ள 21 மீனவர்களைக் காண்பிப்பதற்காக அவர் சுற்றித் திரிகிறார்.
ஈரானின் அஜலுரில் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களில் 60 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த வாரம், அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான காஷ்மீர் மாணவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று தீவிர வேண்டுகோள் அனுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று இரவு தெரிவித்தார்.
COVID19 காரணமாக நாடு திரும்புவதற்கான ஆர்வத்துடன் ஈரானில் உள்ள இந்தியர்களின் பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவர் டுவிட் செய்திருந்தார் அதில், இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான ஒரு திரையிடல் செயல்முறையை அமைக்க ஈரானிய அதிகாரிகளுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொடிய கொரோனா வைரஸ் நோய் கடந்த இரண்டு மாதங்களில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பால் உலக சுகாதார அவசரநிலை என அறிவிக்கப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸ் நோயால் உலகெங்கிலும் 3,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"