ஆவின் நிறுவனம் இன்று தங்களது தயாரிப்பில் ஒன்றான வெண்ணெய்யின் விலையை உயர்த்தியுள்ளது. நேற்று நெய்யின் விலையை உயர்த்திய ஆவின் நிறுவனம் இன்று இதர பொருட்களின் விலையை உயர்த்தியது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சமையலுக்கு பயன்படுத்தும் வெண்ணெய்யிலிருந்து உப்பு கலந்த வெண்ணெய் வரை அனைத்து வகை பொருட்களுக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை மட்டுமின்றி நெய், வெண்ணெய், பனீர், இனிப்பு என்று பலவகை உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஆவின் பொருட்களின் விலையானது இந்தாண்டில் இருந்து அவ்வப்போது உயர்ந்து வருகிறது.
நேற்று பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.580 இருந்து ரூ.630க்கு உயர்த்தப்பட்டது. ஆவினில், 5 லிட்டர் நெய் பாட்டில், ரூ.2,900 இருந்து ரூ.3,250 உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாற்றப்பட்ட நிலையில், தற்போது வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ.52 இருந்து ரூ.55 உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் ரூ.250 இருந்து ரூ.260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உப்பு கலந்த 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் வெண்ணெய் ரூ.255 இருந்து ரூ.265 உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த வெண்ணெய் 200 கிராம் ரூ.130 இருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil