கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் புதிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று (டிச.23) சனிக்கிழமை புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
இது டிசம்பர் 16-ம் தேதி உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை விட 2 மடங்கு அதிகமாகும். அதே போல் கொரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கையும் 5% உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை புதிய கோவிட்-19 அலை என்று தற்போது கூறமுடியாது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ் செல்வவிநாயகம் கூறுகையில்,"நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். கடுமையான சுவாச நோய்த் தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளையும் பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய தேவையில்லை.
இருப்பினும், நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் தீவிரமாக அறிவுறுத்துகிறோம். முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்" என அவர் கூறினார்.
தற்போது சிசிக்சையில் உள்ள 123 பேரில் 57 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் முறையே 9, 2 மற்றும் 6 பேர் சிசிக்சையில் உள்ளனர். திருவாரூரில் 12, கோவையில் 10 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“