மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழகம் தற்போது ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் மட்டுமே இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள X பதிவில், பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பி.எம். ஸ்ரீ #NEP2020-ன் முன்மாதிரி பள்ளிகள் என்று கூறியுள்ளது.
மேலும், "அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசால் கையெழுத்திடப்படும். தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் இடையேயான இந்த கூட்டாண்மை வலுவான மத்திய-மாநில உறவுகளை குறிக்கிறது என்றும் கல்வி அமைச்சம் கூறியுள்ளது.
மத்திய அரசு PM Schools for Rising India (PM SHRI) திட்டத்தில் 14,500 பள்ளிகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது மற்றும் 1.8 மில்லியன் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பள்ளிகள் மாதிரி கல்வி நிறுவனங்களாக செயல்படுவதை உறுதி செய்வதையும், தேசிய கல்விக் கொள்கையின் (NEP) 2020-ன் உணர்வை உள்ளடக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தில் அரசு முதற்கட்டமாக 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6,448 பள்ளிகளை தரம் உயர்த்த தேர்வு செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“