'அவியல் கூட்டு போல வேளாண் பட்ஜெட்': இ.பி.எஸ், அண்ணாமலை கடும் விமர்சனம்

அவியல், கூட்டுப்போல் வேளாண்மை பட்ஜெட் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவியல், கூட்டுப்போல் வேளாண்மை பட்ஜெட் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Agriculture Budget 2025 political leaders reaction Tamil News

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் .

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் தொடரில், நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisment

இந்த வேளாண்மை பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 2025-26 நிதியாண்டில் தமிழ்நாடு வேளாண்மை துறைக்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இ.பி.எஸ் விமர்சனம்  

இந்நிலையில், அவியல், கூட்டுப்போல் வேளாண்மை பட்ஜெட் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்பது போலியானது. 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரமாக வாசித்துள்ளனர். வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டுமே தி.மு.க.வின் சாதனை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் நெல், கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் பல உள்ளன. சாகுபடி பரப்பை 75 சதவிகிதமாக உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை 37.7 சதவிகிதமாகவே உள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் போல் ஒரு திட்டத்தை தி.மு.க. கொண்டு வரவில்லை.

அத்திக்கடவு அவினாசியில் 2வது திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. அதனையும் இந்த அரசு கைவிட்டுள்ளது. கடன் பெற்றுதான் திட்டங்களை நிறைவேற்றும் நிலை உள்ளது. கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதுதான் தி.மு.க. அரசு செய்த சாதனையாகும். நிதி மேலாண்மையை சரி செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்தது?

நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நிறைய கடன் வாங்கி உள்ளது. மழைநீரை சேமிக்கும் குடிமராமத்து திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழுமையாக கடனில் மூழ்கியுள்ளது.

வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் போல ஒரு பட்ஜெட்டை அறிவித்துள்ளனர். விவசாயிகளை ஏமாற்றுவதில் தி.மு.க.வினர் வல்லவர்கள். தவறு செய்ய வசதியான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன. விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் இதில் பல உள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.  

அண்ணாமலை விமர்சனம் 

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். 

கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக?

பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?

நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை." என்று அவர் பதிவிட்டுள்ளார். 

Mrk Panneerselvam Agriculture TN Budget

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: