Tamilnadu Kodanad Case Reopen Issue : கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திமுக அரசியல் காழ்புணர்ச்சியுடன் நடந்துகொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகிய இருவருக்கும் நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றிய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நீலகிரி மாவட்ட போலீசார், வளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது மனோஜ் மற்றும் சயான் நிபந்தனை ஜாமினிலும் மீதமுள்ள 8 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக போலீசார் சயானிடம் ரகசிய விசாரணை நடத்தியதாகவும், இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலர் மீது குற்றச்சாட்டு எழுந்ததாகவும தகவல் வெளியானது. ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் திமுக அரசு இந்த வழக்கில் மறுவிசாரணை செய்து வருவதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழு, கொடநாடு வழக்கில் நீதிமன்ற அனுமதி இன்றி திமுக அரசு மறுவிசாரணை நடத்தப்படுவதாக புகார் அளித்துள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் நடத்தப்பட்ட இந்த சந்திப்பில், அதிமுக சார்பில் ஆளுநரிடம பல கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, பி தங்கமணி மற்றும் டி ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரின் இடங்களில் வருமானவரித்துறை ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதை தொடர்ந்து அதிமுக குழுவுடன் ராஜ் பவனுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், "கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்படி தனது கட்சியின் வாக்குறுதியின் ஒரு பகுதி என்று கூறுவார். கொடநாடு வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு இறுதி விசாரணை மட்டுமே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதிலும், அ.தி.மு.க -வை குறை கூறுவதிலும் திமுக தேவையற்ற ஆர்வம் காட்டி வருகிறது என கூறியுள்ளார்.
மேலும் திமுக அரசின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கி, அதிமுக உறுப்பினர்கள் நேற்று (புதன் கிழமை) முதல் இரண்டு நாட்களுக்கு சட்டசபை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பழனிசாமி திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை மக்களிடம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதால், மக்களை திசை திருப்பும் நோக்கில் திமுக அரசு கொடநாடு வழக்கை கையில் எடுத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் திமுக அரசு கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு கொடநாடு விவகாரத்தில் ஆர்வம் காட்டி வருகிறது. "தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,800 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மூன்றாவது அலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறிவரும் நிலையில்,, திமுக அரசு அதில் கவனம் செலுத்தாமல் பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துகிறது," என குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.