பா.ஜ.க கூட்டணியிலிருந்துவெளியேறியதை தொடர்ந்து அதிமுகவில் மாற்றங்கள் செய்வதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்களை கொண்ட அ.தி.மு.க-வில் பல மாவட்டங்களை பிரித்து புதியவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கி இருக்கிறார்.
அதன்படி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முதற்கட்டமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, ஓ.பி.எஸ் அணிக்கு தாவிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், டி.டி.வி. அணிக்கு தாவிய திருச்சி மாநகர், பெரம்பலூர், தஞ்சாவூர் கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் இருந்த அரக்கோணம் ரவியின் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் ரவிக்கும், மேற்கு மாவட்டம் எஸ்.எம்.சுகுமாருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சுகுமார் இதற்கு முன்பாக மாவட்ட புரட்சித் தலைவி பேரவையின் பொருளாளராக இருந்தவர். திருவண்ணாமலை தெற்கு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், வடக்கு தூசி மோகனும் மாவட்ட செயலாளராக இருந்தனர்.
திருவண்ணாமலை நான்காக பிரிக்கப்பட்டு, கிழக்கு, மத்திய, வடக்கு, தெற்கு என மாற்றி, மாவட்ட செயலாளருக்கு தலா இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, கிழக்குக்கு முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மத்திக்கு போளூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஜெயசுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு, வடக்குக்கு அதே மா.செ.க்கள்தான் இருக்கின்றனர்.
அதேபோல, தஞ்சாவூர் நான்காக பிரிக்கப்பட்டு, கிழக்குக்கு பாரதிமோகன், மேற்குக்கு ரெத்தினசாமி, மத்திக்கு எம்.சேகர் (ஒரத்தநாடு பேரூராட்சி மன்றத் தலைவர்), தெற்கு மாவட்டத்துக்கு சி.வி.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். தேனி மாவட்டம் தேனி கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு, முருக்கோடை ராமர், ஜக்கையன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருந்த தச்சை கணேசராஜாவின் பவர் குறைக்கப்பட்டு இருக்கிறது. திருநெல்வேலி மாநகருக்கு தச்சை கணேசராஜாவும், புறநகருக்கு இசக்கி சுப்பையாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளராக இருக்கும் தளவாய் சுந்தரத்துக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாநகருக்கு முன்னாள் துணை மேயர் சீனிவாசன், பெரம்பலூருக்கு இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். கும்பகோணம் மாநகரச் செயலாளராக ராமநாதனும், தஞ்சாவூர் மாநகர செயலாளராக சரவணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை, கோவை, திருச்சி, மதுரை என நான்கு மண்டலங்களாக செயல்பட்டு வந்த அதிமுக ஐடி விங் மொத்தமாக ஒரு குடையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐடி செயலாளாரக ராஜ் சத்யன், தலைவராக சிங்கை. ராமசந்திரன், இணை செயலாளராக கோவை சத்யன், பா.ஜ.க-வில் இருந்து வந்த நிர்மல் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசியபோது; ``அ.தி.மு.க-வில் தற்போது அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஜெயலலிதா மறைவின்போது கட்சியில் இருந்தது 60-க்கும் குறைவான மாவட்டங்கள்தான்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக ஆனபோதே, அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முனைப்பு காட்டினார். ஆனால், 2018 வாக்கில், கட்சியில் ஓ.பி.எஸ் தரப்பின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், அமைப்பு ரீதியாக பெரியளவில் மாற்றங்கள் செய்ய முடியவில்லை. 2020 வாக்கில் கட்சியின் 80 சதவிகித ஆதிக்கம் செலுத்தும் இடத்துக்கு எடப்பாடி வந்துவிட்டார். அதன்படிதான், 2020 ஜூலையில் ஆறு மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகுதிகளை கையில் வைத்திருந்த மா.செ.க்களின் அதிகாரம் பறிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கோவை, திருச்சி, நாகை, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு மூன்றாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ஒரு மாவட்ட செயலாளர்களுக்கு குறைந்த பட்சமாக மூன்று தொகுதிகள் கையில் கொடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, திருவள்ளூர், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டன. தற்போது திருவண்ணாமலை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.
அமைப்பு ரீதியாக அதிமுகவுக்கு 82 மாவட்டமாக உயர்ந்து இருக்கிறது. இவையெல்லாம் பெரிய அளவில் அதிருப்தியாகவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்களான வேலுமணி (கோவை புறநகர் தெற்கு மாவட்டம்), கள்ளக்குறிச்சி குமரகுரு, விழுப்புரம் சி.வி.சண்முகம், நாமக்கல் பி.தங்கமணி, தர்மபுரி கே.பி.அன்பழகன், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ராமநாதபுரம் முனியசாமி, சிவகங்கை செந்தில்நாதன் ஆகியோர் ஐந்து, ஆறு தொகுதிகளை கையில் வைத்து இருக்கிறார்கள்.
இவர்கள் தலையில் கைவைக்கும்போது மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, கூட்டணி தொடர்பாக தேவையில்லாமல் பேசியது, செயல்பாடு மூலமாக செல்லூர் ராஜூ மீது தலைமை மிக அதிருப்தியாக இருக்கிறது. எனவே, அவரது மதுரை மாநகர் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறி வைத்து செயல்பட்டார். ஆனால், சரவணனுக்கு மருத்துவ அணியின் இணை செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால், செல்லூர் ராஜூவின் தலை தற்சமயம் தப்பியிருக்கிறது. அதேபோலதான், ஓ.பி.எஸ் பக்கமிருக்கும் வைத்திலிங்கத்தை காலிசெய்ய தஞ்சாவூர் மாவட்டம் 4 மாவட்டமாகவும், 2 மாநகராகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், திருச்சி மாநகர் மாவட்டச்செயலாளர் ரேசில் இருந்தது நால்வர். அதில் மூத்தவர் மனோகரன், அவருக்கு அடுத்தபடியாக மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன், 3-வதாக எடப்பாடி வீட்டின் கிச்சன் கேபினட்டாக இருக்கும் ஆவின் கார்த்திகேயன், 4-வதாக எம்.சி.சம்பத்திற்கு வேண்டியப்பட்டவரான ப்ரியாசிவக்குமார் என 4 பேர் ரேஸில் இருந்தனர்.
இந்த நால்வரில் மாநகர செயலாளர் பதவியை பிடிக்கப்போவது அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவிய 2 பேரில் ஒருவருக்குத்தான் என பெரும்பான்மையான அதிமுகவினரால் பேசப்பட்டது. அதில் சீனியர், ஜெயலலிதா காலத்தில் அவரின் நன்மதிப்பை பெற்றவர், அப்போதைய அரசு கொறடா மனோகருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரம், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணைமேயரும், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளருமான சீனிவாசன் சைலன்ட்டாக முன்னாள் எம்.பி., ஒருவர் மூலம் மூவ் செய்திருக்கின்றார். திருச்சியில் உள்ள முக்கிய சமுதாயத்தை சேர்ந்த சிலரும் சீனிவாசனுக்கு பச்சைக்கொடி காட்டி பரிந்துரைத்திருக்கின்றனர்.
திருச்சியில் கட்சியை தனது கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள முடிவெடுத்த எடப்பாடியோ பக்காவா ப்ளான் போட்டு மூத்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மனோகரை விட்டுக்கொடுக்க மனமின்றி அவருக்கு அமைப்புச்செயலாளர் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கின்றார். அதேநேரம், தனது வீட்டு கிச்சன் வரை நெருங்கிய தொடர்பில் இருக்கும் கார்த்திகேயனை இந்த முறை விட்டுக்கொடுப்பா, உனக்கு வயசு இருக்கு அடுத்தப்பல நல்ல பொறுப்பை தரேன் என அவரையும் அனுசரித்து, முன்னாள் துணைமேயர் சீனிவாசனை மாநகர மாவட்ட செயலாளராக நியமித்து, திருச்சியில் இருக்கற மூணு முக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவுங்களுக்கும் பதவி கொடுத்து எல்லாரையும் குஷிப்படுத்திட்டார் எடப்பாடியார் என தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.