தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டுகளைப் போல் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பட்டாசுகள் வெடிப்பால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் 'பசுமை பட்டாசுகள்' தயாரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தியதோடு, மாசு அளவைக் குறைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் கூறியது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கவும் மாநில அரசுகளை அறிவுறுத்தியது.
அதன்படி கடந்த காலங்களைப் போல் 2018,2019,2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கூறப்பட்டது போல், இந்தாண்டும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகள் சரவெடி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், "தீபாவளி மக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை. அதிக சத்தமில்லாத, காற்று மாசுபாடு இல்லாத பாதுகாப்பான தீபாவளியை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் கொண்டாடுங்கள். பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தீபஒளி திருநாளை கொண்டாடுங்கள்" என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“