CM Edappadi K Palaniswami Reduced Tamil Nadu Arasu Cable Tariff: தமிழ்நாடு அரசு கேபிள் கட்டணம் ரூ 130 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஜி.எஸ்.டி வரி சேர்த்து வசூலிக்கப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆகஸ்ட் 10 முதல் இது அமுலாகும். வேலூர் மாவட்டத்திற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
தமிழ்நாட்டில் கேபிள் டிவி கட்டணம், முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதை அரசுடைமையாக்கி 100 ரூபாய் மாதக் கட்டணம் என மலிவாக்கினார். அதன்பிறகு தமிழ்நாடு அரசு கேபிள் கார்ப்பரேஷன், மத்திய அரசிடம் இருந்து டிஜிட்டல் உரிமம் பெற்றது. எனவே கேபிள் கட்டணமும் பல்வேறு பேக்கேஜ்களாக உயர்ந்தது.
முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி அறிக்கை
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், நடைபெற இருக்கும் வேலூர் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் கேபிள் கட்டணம் பற்றிய பேச்சுகள் எதிரொலித்தன. இந்தச் சூழலில் இன்று (ஜூலை 31) மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழக அரசு கேபிள் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ 130 ஆக குறைக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தொகையுடன் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 10 முதல் இது அமுலுக்கு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால், அங்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. தமிழக அரசு 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்து 35.2 லட்சம் சந்தாதாரர்களுக்கு இலவசமாக அவற்றை வழங்கியிருப்பதாகவும் தனது அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.