தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். பெரும்பாலை அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மற்றும் தமிழ்நாடு கல்வெட்டுகள் தொகுதி XXVIII பற்றிய அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழகத்தின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வு, தொல்லியல் நிபுணர்களிடம் மட்டுமின்றி, உலகத் தமிழர்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பண்டைத் தமிழ்சமூகத்தின் தொன்மை, பண்பாடு,தொழில்நுட்பம், விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் 2024-ம் ஆண்டில் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
அதன்படி சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அடுத்தக்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் கே.ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“