'நம்ம ஊர் திருவிழா' மீண்டும் ஆரம்பம்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு | Indian Express Tamil

‘நம்ம ஊர் திருவிழா’ மீண்டும் ஆரம்பம்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு

கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் ‘நம்ம ஊர் திருவிழா’வில் பங்குபெற நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நம்ம ஊர் திருவிழா’ மீண்டும் ஆரம்பம்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பிரம்மாண்ட கலை விழா நடத்த முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்கு நாட்டுப்புற கலைக்குழுக்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் நாட்டுப்புறக் கலைகளை கொண்டுசெல்வதற்காக, சென்னையில் ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பிரம்மாண்ட கலைவிழா கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.

இளம் தலைமுறையினர் நாட்டுப்புற கலைவடிவங்களின் சிறப்பை அறிந்து கொள்ளவும், நாட்டுப்புற கலைகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும் இந்த முயற்சி தமிழக அரசால் மேற்கொள்ளப்படுகிறது. பங்குபெற விருப்பப்படும் நாட்டுப்புறக் கலைஞர்கள் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பங்குபெற விருப்பப்படும் கலைஞர்கள் தங்களது கலைத்திறமையை 5 நிமிட விடியோவை பென்ட்ரைவில் பதிவு செய்து உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

கலை பண்பாட்டுத்துறையின் தேர்வுக் குழு தகுதியானவர்களை தேர்வு செய்து, நடக்கவிருக்கும் ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் அரங்கேற்ற அனுமதிப்பார்கள். இந்த காலை நிகழ்விற்கு பங்குகொள்ளக்கூடும் கலைஞர்கள், ஒரு குழுவில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட கலைஞர்கள் காஞ்சிபுரம் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தபால் அனுப்பலாம்.

மேலும், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்ட கலைஞர்கள் சேலம் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தபால் அனுப்பலாம்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டத்தினர் தஞ்சாவூர் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தபால் அனுப்பலாம்.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தினர் திருச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் வழங்கலாம்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தினர் மதுரையிலும், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலி உதவி இயக்குநர் அலுவலகத்தில் தபால் அனுப்பலாம்.

கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தபால் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu art and culture department conducts namma oor thiruvizha