2023ஆம் நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை தள்ளிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
வழக்கமான சட்டசபையில் ஆளுநர் வாசிக்கும் உரைகளை அவர் படித்தாலும் அது தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைகளாகவே இருக்கும். அதை ஆளுநர் அப்படியே வாசிப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் குற்றம் சாட்டியதில், ஆளுநரின் உரையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் தாக்கல் செய்கிறேன். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று பேசினார்.
இதைப்பற்றி மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
மேலும், தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை எவ்வளவு நாட்கள் நடத்தலாம் என்பது குறித்த அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற 11, 12ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஜனவரி 13ஆம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தின் கடைசி நாளில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil