தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 24 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே தொடங்குகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த 7 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 2024 -2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் பொது விவாதம் நடைபெற்று முடிந்தது. ஆனால் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கவில்லை. எனவே ஜூன் 24 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி இருக்கிறேன். அன்றைய தினம் முதல் எத்தனை நாட்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க வேண்டும், எந்தெந்த தேதியில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க வேண்டும் என்பது அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதனை ஜூன் 24 ஆம் தேதிக்கு முன்பாகவே ஒரு தேதியில் முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதிக்கு பதில் ஜூன் 20 ஆம் தேதியே தொடங்கவுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பேரவை முன்னதாகவே தொடங்கப்படுகிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக ஜூன் 20 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் நாளை (ஜூன் 12) காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். நாளைய தினம் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“