Tamil Nadu Assembly election 2021 : திமுக மகளிரணி மாநில செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வியாழக்கிழமை (10/12/2020) அன்று ”விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” பிரச்சாரத்தில் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை எஸ்.ஐ.எஸ்.எச் காலனியில் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 23 கோடி மதிப்பிலான மேம்பாலம் தற்போது வரை முடிக்கப்படவில்லை என்று கூறினார். மேலும் நொய்யல் ஆறு சீரமைப்பிற்காக ரூ. 230 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த திட்டம் நிறைவேறவில்லை. இது தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முக ஸ்டாலின் கேட்டுக் கொண்ட போதும் முதல்வரிடம் எந்தவிதமான பதிலும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்த மாவட்டம் வளர்ச்சி என்பதை காணவே இல்லை என்று கூறினார். 2 முதலீட்டாளார்கள் மாநாடு நடைபெற்றது. ஆனால் அதன் மூலம் கோவைக்கு கிடைத்த பயன் என்ன? தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய், தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு செல்ல தயாராக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க : இயற்கை விவசாயத்திற்கு மாறும் நீலகிரி; புதிய செயலி அறிமுகம் !
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொரோனா நோய்தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். ஐபேக் என்ன சொல்லித்தருகின்றதோ அதை உள்வாங்கி அப்படியே பேசிக் கொண்டிருக்கிறார் கனிமொழி. அவருக்கு கோவையில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஒன்றும் தெரியவில்லை.
கடந்த 50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை கோவை கடந்த 5 ஆண்டுகளில் பெற்றுள்ளது. மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சாலைகளும் விரிவாக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்வடிவம் பெற்று வருகிறது. பாதுகாப்பு ஆயுதங்கள் உருவாக்கும் தொழிற்சாலையை இங்கே நிறுவ அனுமதி பெற்றுள்ளோம். மாவட்டத்தில் புதிதாக 5 அரசு கலைக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் கோவையில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் துவங்கப்பட உள்ளது என்று பட்டியலிட்டார். கொங்கு மற்றும் டெல்டா பகுதிகளில் முதல்வருக்கான ஆதரவு பெருகி வருகிறது என்று கூறிய அவர், தொடர்ந்து கோவையில் செயல்படுத்தப்பட இருக்கும் முக்கியமான திட்டங்கள் குறித்தும் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil