மக்கள் அளித்த இடைத்தேர்தல் முடிவை தலை வணங்கி ஏற்கிறேன்… ஸ்டாலின் அறிக்கை!

இந்த இடைத்தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க இடைத்தேர்தல்

By: Updated: October 24, 2019, 04:51:16 PM

Tamil Nadu Assembly Election, Nanguneri, Vikravandi Results : பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாக தொடங்கின. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 12507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்க தொடங்கினார்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 29508 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். இந்நிலையில் 2 தொகுதிகளிலும் 22 சுற்றுக்களின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி:

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். இங்கு முத்தமிழ்ச்செல்வன் பெற்ற வாக்குகள் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 . திமுகவைச் சேர்ந்த புகழேந்தி பெற்ற 68,646 வாக்குகள். சுமார் 44,782 வாக்குகள் வித்யாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

நாங்குநேரி தொகுதி:

இதுவரை காங்கிரஸ் தொகுதியாக இருந்த நாங்குநேரியையும் அதிமுக தற்போது கைப்பற்றியுள்ளது. இங்கு அதிமுக வேட்பாளர் நாராயணன் 96, 562 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 32,333 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்துள்ளார். நாங்குநேரியில் ரூபி மனோகரன் பெற்ற வாக்குகள் 61, 450.

அரசியல் தலைவர்களின் வரவேற்பும், எதிர்ப்பும்:

1. முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

”இந்த இடைத்தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க இடைத்தேர்தல். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்ததார்கள். இப்போது உண்மை தெரிந்த காரணத்தால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு அமோகமான வெற்றியை அளித்துள்ளார்கள். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார்.

2. கே.எஸ் அழகிரி:

”2 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகார பலம், பண பலம் கூடுதலாகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

3. இல.கணேசன் :

”மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் தமிழகம் வந்ததால் இடைத்தேர்தலில் அதிமுகக்கு வெற்றி முகம் கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

4. பொன். ராதாகிருஷ்ணன்:

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜகவின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றும் தமிழக மக்கள் பாஜகவை எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள் என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன் . ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

5. அமைச்சர் ஜெயக்குமார்:

ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டன. இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது. பணநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டியில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது.உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி தொடரும், இதே வெற்றியோடு அனைத்து தேர்தல்களையும் சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

6. துணை முதல்வர் ஓபிஎஸ்:

”இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி தொடரும். மக்களவை தேர்தலை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மக்களின் மனநிலையை ஸ்டாலின் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. முதலமைச்சர் என்ற கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கும் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது” என்றார்.

7. அமைச்சர் சி.வி.சண்முகம் :

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும், பித்தலாட்டம் பேசிய திமுகவிற்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் இடைத்தேர்தல் வாயிலாக வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

8. டிடிவி தினகரன்:

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, பண பலத்தால் கிடைத்த வெற்றி என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.

9. மு.க ஸ்டாலின் அறிக்கை:

”ஆளும் கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது, அண்ணாவின் கூற்று. அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம். திமுக-வைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை. கலைஞர் வழியில் அனைத்தையும் ஒன்றாகக் கருதும் பரிபக்குவம் பெற்றவர்கள் நாம்.

வாக்களித்தவர்களுக்கு நன்றி செலுத்தும் அதே நேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தொடர்ந்து உழைப்போம்.எப்போதும் தேர்தலுக்காக பணியாற்றுவது என்பது, தேர்தல் பணி மட்டுமல்ல, அஃது இயக்கப் பணியும் இணைந்தது தான். கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றினோம் என்ற உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று, நிறைவு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu assembly election nanguneri vikravandi results leaders reactions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X