தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரும் 7,8 தேதிகள் டெல்லியில் நடைபெற உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஓரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று சொல்லி வருகிறது. வருடத்தின் பல மாதங்கள் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும், அதை தவிர்க்க ஓரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி சொல்லி வருகிறார்.
பிரதமரின் இந்த ஆலோசனையை சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
2021ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலை நடத்தலாம். மற்ற மாநில சட்டசபைக்கு 2024ம் ஆண்டு தேர்தல் நடத்தலாம் என சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
இதை நடைமுறைபடுத்த வேண்டுமானால், சில மாநில சட்டசபைகளின் பதவி காலம் குறைக்கப்பட வேண்டும். சில மாநிலங்களுக்கு பதவி காலம் நீடிக்கப்பட வேண்டியது இருக்கும். அப்படியானால் அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் மாற்றம் செய்தாக வேண்டும்.
ஓரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் 7,8ம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 7 தேசிய கட்சிகள், 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டால், ஓரே தேர்தல் நடைமுறைக்கு வரும். அப்படியானால் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபையின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும். ஓரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டியது வரும் என தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓரே நேரத்தில் தேர்தல் நல்லதா? ரவிக்குமார் சொல்வதென்ன?