Advertisment

‘துணிச்சல் பற்றி நீங்கள் சொல்ல தேவையில்லை’ சட்டசபையில் ஸ்டாலின் - துரைமுருகன் - இ.பி.எஸ் காரசார விவாதம்

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
mk stalin duraimurugan eps

சட்டசபையில் ஸ்டாலின் - துரைமுருகன் - இ.பி.எஸ் காரசார விவாதம்

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலயில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கள்கிழமை கூடியது.

Advertisment

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதத்துடன் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (அக்டோபர் 09) காலை 10 மணிக்கு கூடியது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து பேசினர். இந்த தீர்மானம் முழுமையாக இல்லை என்று கூறி பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “காவிரி பிரச்னை 50 ஆண்டுகால பிரச்னை. காவிரி நீரை பெறுவதற்கான பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது காவிரி நதிநீர் தமிழகத்தின் ஜீவநதி, தமிழகத்தின் உயிர் நாடி. 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி உள்ளது.

காவிரி நீரை பெறுவதற்காக பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடுவதுதான் நியாயமானது.

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும். பயிர்கள் கருகிவிட்டது. அதற்கு யார் பொறுப்பு. தி.மு.க எம்.பி.க்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றபோது நட்பின் அடிப்படையில் கேட்டிருக்கலாம். எங்களிடம் இருந்த துணிச்சல் ஏன் உங்களிடம் இல்லை.

தேசிய கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அதிகமான அழுத்தத்தை கொடுத்தால்தான் தீர்வு கிடைக்கும் என சொல்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு ரூ 13,500 தான் அறிவிக்கப்பட்டுள்ளது, அது போதாது. கர்நாடகாவில் தேசிய கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கிடைப்பது கஷ்டமாகவே உள்ளது.

தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அ.தி.மு.க துணை நிற்கும். கவனமாக இருந்து தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மனதோடு செயல்பட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். அடுத்த 6 மாத குடிநீர் தேவைக்கு அரசுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.  அப்போது மு.க. ஸ்டாலின் பேசுகையில், “துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டாம். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் பேசவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை நான் நிரூபிக்கட்டுமா?

ஆதாரம் இல்லாமல், இல்லாதது பொல்லாததை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பேசக் கூடாது. பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் வந்து பேசுவதுதான் மரபா, எந்த ஆதாரத்தை வைத்து தி.மு.க உறுப்பினர்கள் பேசவில்லை என்று சொல்கிறீர்கள்,  தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காவிரி குறித்து பல முறை பேசியுள்ளனர். தவறான கருத்துகளை அவையில் பதிவு செய்யக் கூடாது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

அப்போது சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையின் அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகனைப் பேச அழைத்தார். 

அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,  “எதிர்க்கட்சித் தலைவருக்கு பேசியது எல்லாம் தெரியும், ஆனால், பேசியதெல்லாம் இந்த குழப்பங்கள் இருக்கு இல்லையா, நம்ம குழப்பங்கள் அதில் மறந்து போயிருக்கும்” என்று அ.தி.மு.க-வில் நடந்த குழப்பத்தில் தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றட்தில் காவிரி பிரச்னை குறித்து பேசியது மறந்துபோயிருக்கும் என்று கூறினார்.

இதையடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பேரவைத் தலைவர்கள் அவர்களே திசை திருப்ப வேண்டாம். நம்முடைய உரிமைகளைக் காப்பதற்காக நான் பேசிக்கொண்டிருக்கிறேன். பேசிவிட்டால் போதுமா, நீங்கள் 38 உறுப்பினர்கள் இருக்கிறீர்கள், ஏன அவையை ஒத்திவைக்கலாம் இல்லையா? அப்படி அழுத்தம் கொடுத்ததால்தான், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, காலதாமதம் செய்த காரணத்தினாலேயே, மத்திய அரசு மீது நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். துணிச்சலுடன் தொடர்ந்தோம். அந்த துணிச்சல் உங்களிடத்தில் காணவில்லையே, பார்க்க முடியவில்லையே” என்று ஆவேசமாகப் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன துணிச்சல் என்பது எங்களுக்குத் தெரியும். அதை சொல்லி இந்த அவையில் மரபை மீற வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக, உறுதியாக பலமுறை காவிரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி இருக்கிறோம். பலமுறை அவையை நடத்த முடியாத அளவுக்கு செய்திருக்கிறோம். நான் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். எத்தனையோ பிரச்னைகளை வைத்து நாங்கள் செய்திருக்கிறோம். அதெல்லாம் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. சட்டமன்றத்தில் நாங்கள் எல்லாம் அமைதியாக இருந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அமைதியாக உக்காந்திருக்கிறோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று கருதுகிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில் காவிரி தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு அளிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment