Today tamil nadu legislative assembly news in tamil: கல்வியின் வளர்ச்சிக்காக, சட்டசபையில், தி.மு.க., தொடர்ந்து, குரல் எழுப்பும்,'' என, அக்கட்சி தலைவர், ஸ்டாலின் பேசினார். மாணவ பருவம் என்பது, நினைத்த நேரத்தில் கிடைக்கக் கூடியதல்ல. அப்படிப்பட்ட பருவத்தில் தான், அறிவை, கல்வியை, வளர்ச்சியை, ஆற்றலை, வளர்த்துக் கொள்ள முடியும்.நாட்டில், ஆட்சி செய்வதற்கு, பல கட்சிகள் வரலாம். ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், பல திட்டங்களை, பல பணிகளை, பல காரியங்களை, மக்களின் முன்னேற்றத்திற்காக செய்யலாம்.ஆனால், எல்லாவற்றையும் தாண்டி கல்விக்கு, எந்த அரசு முன்னுரிமை தருகிறதோ, அந்த அரசு தான் நிலைத்து நிற்கும். கல்விக்கு, காமராஜர் முக்கியத்துவம் தந்தார். சமச்சீர் கல்வி என்ற, அற்புதமான திட்டத்தை, கருணாநிதி நிறைவேற்றி தந்தார். கல்வி வளர்ச்சிக்காக, சட்டசபையில், தி.மு.க., தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு, இலவச காலணிக்கு பதிலாக, 'ஷூ மற்றும் சாக்ஸ்' 10.02 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்,'' இதனால், 28.64 லட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறுவர். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
Live Blog
tamil nadu assembly news today: சட்டசபை கூட்டத்தொடர் முடிவடையும் வரை, ஒவ்வொரு நாளும், சட்டசபையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே, காரசாரமான விவாதங்களும், மோதல்களும் அரங்கேறுவது உறுதி.
வழக்கமாக அமைச்சர்கள் பதிலுரை வழங்கும்போது, தங்களுடைய துறை சார்ந்த முக்கிய குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு, அதை பார்த்து படிப்பார்கள். சில அமைச்சர்கள் முழு பதிலுரையையும் பார்த்தே படிப்பார்கள்.
ஆனால் அமைச்சர் சண்முகம், கையில் ஏதும் குறிப்பில்லாமல் சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் அரசு இதுவரை என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது, செயல்படுத்தவுள்ளது என்பது குறித்த தகவல்களை புள்ளி விவரத்தோடு பேசியதை பேரவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் ரசித்து பார்த்தார்கள்.
அமைச்சர் பேசி முடித்ததும், திமுக உறுப்பினர்கள் சிலர் அமைச்சரை அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். அதே போல் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களும் பாராட்டினர். விவாதத்துக்கு பின் பிற்பகல் சுமார் 1.50 மணிக்கு பதிலுரை வழங்க துவங்கிய அமைச்சர் சண்முகம், 2.25 மணிக்கு தன்னுடைய உரையை முடித்தார்
கோவை மாவட்டம் சூலூரில், 300 ஏக்கரில் தளவாட தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சட்டசபையில் தெரிவித்துள்ளார். சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திக் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சம்பத் இவ்வாறு பதிலளித்தார். சிங்காநல்லூரில் இரண்டாவது டைடல் பார்க் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சம்பத் மேலும் கூறினார்.
ஸ்டாலின் சொன்னபடி அனைத்து கட்சிகளையும் அழைத்திருக்க வேண்டும் என்றால், 80 கட்சிகளை கூப்பிட்டு ஒருநாள் முழுவதும் விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும். சில கட்சிகளின் தாழ்த்தப்பட்ட மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில், இருப்பதால், அவர்களின் கருத்துகளும் இந்த விவகாரத்தில் சரியாக இருக்கும் என நினைத்து அழைத்ததாக முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
குறுக்கிட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறாமல் பார்த்து கொள்ளப்படும் என்று கூறினார்.
நான் அனைத்து கட்சிகளையும் அழைக்க கூறவில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது, அவருக்கு வீரமணி விருது வழங்கினார். எனவே அவரை அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் நான் அதனை கூறினேன். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள கட்சிகளை அழைத்த நீங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சிகளை ஏன் அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என பல கட்சிகளை நீங்கள் அழைத்தது ஏன் என தெளிவுபடுத்த முடியுமா என சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் பதில் : எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதனால்தான் அனைத்து கட்சிகளையும் அழைத்ததாக முதல்வர் பழனிசாமி கூறினார்.
தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாக, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2017-18ம் நிதியாண்டில் போக்குவரத்து துறை ரூ.7,304 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் 110விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. நாகை ஆற்காட்டுத்துறையில் ரூ 150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்
2. தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடலரிப்பை தடுக்க ரூ 30 கோடியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்
3. மாநில தகவல் ஆணையத்திற்கு ரூ 27.79 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்படும்
4.. 12,524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ 64.35 கோடியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்
5. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. வளாகத்தில் ரூ 3.5 கோடியில், 12 ஆசிரியர் குடியிருப்புகள் கட்டப்படும்
நான் பெரும்பாலும், பெயர் குறிப்பிடுவதை தவிர்க்கிறேன், தவிர்க்க முடியாத சில தருணங்களில் தான் பெயரை குறிப்பிட்டிருக்கிறேன், அதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்களும், கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவையில் அது பதிவாகி இருக்கிறது, இதை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கூறுவது சரியல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த தலைவர்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் - சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால், 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க தயாராக இருப்பதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., - நந்தகுமார்: கருணாநிதி அமல்படுத்திய, வீட்டு வசதி திட்டத்தின் பெயரை மாற்றி, பசுமை வீடு திட்டம் என, செயல்படுத்துகிறீர்கள்.
அமைச்சர் வேலுமணி: கருணாநிதி அமல்படுத்திய வீட்டுவசதி திட்டத்தில், பயனாளிக்கு, 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. பசுமை வீடு திட்டத்தில், 300 சதுர அடியில் வீடு கட்டி கொடுக்கப்படுகிறது.நந்தகுமார்: இத்திட்டம், பயனாளிகளை கடனாளியாக்கி உள்ளது. பசுமை வீடு கட்ட, 2.10 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இதில், 30 ஆயிரம் ரூபாய், சூரியஒளி மின் விளக்கிற்கு ஒதுக்கப்படுகிறது. வீடு கட்ட, நான்கு லட்சம் ரூபாய் செலவாகிறது. எனவே, வீடு கட்டுவோர், கந்து வட்டிக்கு பணம் வாங்கி, கடனாளியாகி உள்ளனர்.
அமைச்சர் வேலுமணி: நீங்கள், 70 ஆயிரம் ரூபாய் கொடுத்தபோது தான், கடனாளியாக இருந்தனர். அதன் காரணமாகவே, நாங்கள் கூடுதலாக நிதி வழங்குகிறோம் என்று கூறினார்.
சட்டசபை கூட்டத்தொடர், இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், சட்டசபை கூட்டத்தொடர், வரும் 20ம் தேதியுடன் முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இன்று ( 9ம் தேதி) முதல் வரும் நாட்களில், சட்டசபை கூட்டத்தொடர், காலை, மாலை என இருவேளைகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிமராமத்து பணியை, மாநிலம் முழுவதும் கண்காணித்து, முறைப்படுத்துவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் நேரடியாக ஆய்வு செய்து, பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
'டெண்டர்' விட்டால், பணியை சரியாக செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்பதற்காகவே, விவசாயிகள் பங்களிப்புடன் பணிகள் நடக்கின்றன. குடிமராமத்து திட்டத்தில், எங்காவது தவறு இருந்தால், அதை சுட்டிக்காட்டினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தலா, 730 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள, இரண்டு எரிவாயு மின் நிலையங்கள், 5,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். ஐந்து அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும், கழிவுகள் மற்றும் துாசுகள், காற்றில் கலப்பதை கட்டுப்படுத்த, 3,000 கோடி ரூபாய் மதிப்பில், புதிய உபகரணங்கள் நிறுவப்படும் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம்; நாமக்கல் மாவட்டம், நல்லுார்; திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி ஆகிய இடங்களில், 230 கிலோ வோல்ட் புதிய துணை மின் நிலையங்கள், 150 கோடி ரூபாய் மதிப்பில், இந்த ஆண்டு அமைக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights