காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்ற போது மேட்டூர் அணை சீராக திறந்துவிடப்பட்டது. காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன. உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பாசனப் பகுதியில் 2021 ஆம் ஆண்டு 46.2 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2022 ஆம் ஆண்டு 40.9 லட்சம் டன் நெல் உற்பத்தியும் நடந்துள்ளன.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் தி.மு.க அரசு உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி உரிமையை காப்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் போதுமான நீர் உள்ளபோதும் தமிழகத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது. ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய தண்ணீர் குறைவாகவே கிடைத்தது. இம்மாதத்துக்கான உரிய நீரை கர்நாடக அரசு திறக்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் 4 அணைகளின் நீர் இருப்பு 84 சதவீதமாக உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மாத வாரியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம். தமிழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியை அடுத்து கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய காவிரி நீரை முறையாக திறந்துவிடவில்லை. தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. நீர் தரவேண்டிய சூழலில், 2.28 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைத்துள்ளது. காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17-ஆம் தேதி முதல் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா முறையாக பின்பற்றவில்லை. இன்னும் 2 நாட்களில் காவிரி நடுவர் மன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
சம்பா பயிரை காக்க வேண்டிய அவசியம் உள்ளது. தேவைப்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறுவை பயிர்கள் மட்டுமின்றி சம்பா பயிர்களையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சட்ட வல்லுநர்களை ஆலோசித்து நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த சூழ்நிலையிலும் காவிரி நீரை பெற்று தருவோம். எஞ்சியுள்ள நாட்களுக்கான நீரை பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இதனையடுத்து தீர்மானத்தை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். பின்னர் அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசினார். இதனையடுத்து, இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் பா.ஜ.க மட்டும் தீர்மானத்தை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது. வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானம் இல்லாத காரணத்தால், தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் பாஜகவில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.