காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடக இடையே நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்நாடு சட்டசபை திங்கள்கிழமை கூடுகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (அக்டோபர் 09) தொடங்கி அடுத்த ஒரு வார காலம் வரை நடைபெறும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் 2023 -2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடக இடையே பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அதே போல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம், ஆசிரியர்கள் கைது சம்பவமும் தமிழக அரசின் மீது விமர்சனங்கள் வைக்க காரணமானது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில், காவிரி விவகாரம், ஆசிரியர்கள் கைது மற்றும் சுகாதாரத்துறையில் நடந்த குளறுபடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப அ.தி.மு.க திட்டமிட்டுள்ளது.
மேலும், தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும் சட்டசபையில் அ.தி.மு.க கேள்விகளை எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள குறைகள் மற்றும் குளறுபடிகள் குறித்து அ.தி.மு.க கேள்வி எழுப்ப உள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்தும் அ.தி.மு.க சட்டசபையில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதே போல, தி.மு.க தரப்பிலும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்த் தரவுகளுடன் தயாராக உள்ளது. மேலும், காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சி ஆதரவுடன் அரசு தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடகாவில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சூழலில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது எனத் தெரியவந்துள்ளது.
அதே போல, அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க சார்பில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்தும் முறையிட்டனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை (அக்டோபர் 9) கூடும் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர், நாட்களுக்கு நடைபெறும் என்பது திங்கள்கிழமை சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூடிப்பேசி முடிவெடுக்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“