ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும். அவசர அவசரமாக ஏன் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அரசின் தனித்தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டுவந்துள்ளார். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைப்பது எனில் அது ரத்து, நிராகரிப்பு என அர்த்தம் இல்லை. நிலுவையில் வைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.
ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் ஏன் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும். அவசர அவசரமாக ஏன் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் தொடர்பாக 29 ஆண்டுகளுக்கு முன்பாகவே அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது அதனை தி.மு.க எதிர்த்தது. தி.மு.க எப்போதுமே இரட்டை நிலைப்பாடு எடுத்து வருகிறது. நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்வீர்களா என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், மாநில சுயாட்சி கொள்கையுடன் தொடர்ந்து செயல்படுவோம் சந்தேகமே வேண்டாம். தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்பதில்லை. நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, செய்யாறு விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசத் தொடங்கினார் அப்போது நேரலையில் தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து கார சார விவாதங்கள் நடைபெற்றன.
பின்னர் ஜெயலலிதா பெயரில் இருந்த தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.