எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல். கூட்டணி முறிந்தாலும் அ.தி.மு.க- பா.ஜ.க இடையே ரகசியத் தொடர்பு உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் ஜெயலலிதா பெயரில் இருந்த தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினர். இதேபோல் பா.ஜ.க உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்கட்சி தலைவர் தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்துவிட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அவையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே வெளிநடப்பு செய்துள்ளார். பெயரளவில் ஒரு காரணத்தை கூறி அ.தி.மு.க வெளிநடப்பு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது.
ஜெயலலிதா பெயரில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழக பெயர் மாற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய் செய்தி. இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவையிலே விளக்கம் அளித்துவிட்டார். 2012ல் உருவாக்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு, அப்போது எந்த தலைவர் பெயரும் வைக்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டில் தான் ஜெயலலிதாவின் பெயர் சேர்க்கப்பட்டது.
மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதற்கான மசோதாவுக்கே ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. ஜெயலலிதா பெயரைச் சேர்ப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதலைப் பெற அப்போதைய அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளுநர் ஒப்புதல் தராததால், பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தராததால் அதற்கு முன் இருந்த பெயரிலேயே மசோதா கொண்டு வரப்பட்டது. மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டுவதற்கான மசோதா, ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான மசோதாவையும் இன்று மீண்டும் நிறைவேற்ற உள்ளோம்.
ஆனால், இந்த மசோதாவை வரவேற்றிருக்க வேண்டிய அ.தி.மு.க.,வினர், என்ன மசோதா என்று கூட தெரியாமல், அரசின் தீர்மானம் நிறைவேறும்போது அவையில் இருக்க கூடாது என்ற காரணத்திற்காக வெளிநடப்பு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல். நாம் எதாவது பேசிவிட்டால் டெல்லியில் இருப்பவர்கள் கோபித்துக் கொண்டு விடுவார்கள் என வெளிநடப்பு செய்துள்ளனர். கூட்டணி முறிந்தாலும் அ.தி.மு.க- பா.ஜ.க இடையே ரகசியத் தொடர்பு உள்ளது. இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.