scorecardresearch

குழந்தைகளிடம் இரட்டை விரல் சோதனை; இனியும் தி.மு.க அரசு பதவியில் நீடிக்க வேண்டுமா? பா.ஜ.க காட்டமான கேள்வி

இரட்டை விரல் சோதனை என்பது விஞ்ஞானபூர்வமானது அல்ல என்பதோடு, குழந்தைகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்

RN Ravi Narayanan Thirupathi
ஆர்.என்.ரவி – நாராயணன் திருப்பதி

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமண புகாரில் விதிகளை மீறி குழந்தைகளிடம் இரட்டை விரல் பரிசோதனை செய்தது தொடர்பான ஆளுனரின் கடிதத்திற்கு தமிழக அரசு பதில் அளிக்காதது ஏன் என்று தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக புகார் அளிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது பொய்யான வழக்கு. மேலும் இந்த வழக்கில் பெண் குழந்தைகளிடம் விதிகளை மீறி இரட்டை விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று கூறியிருந்தார்.

ஆளுனரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் தொடர்பான வழக்கின் விபரங்களை 7 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுபாக்கு ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுனரின் கடிதத்திற்கு தமிழக அரசு ஏன் பதில் அளிக்கவில்லை என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘சிதம்பரம் தீக்‌ஷிதர்களின் பெண் குழந்தைகளிடம் கன்னித்தன்மையை சோதிக்க ‘இரட்டை விரல் சோதனை’ செய்து கொடுமைக்கு உட்படுத்தியது தமிழக அரசு என்று ஆளுநர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதோடு, இந்தக் குரூர முறையை கையாண்ட இந்த அரசு இனியும் நீடிக்க வேண்டுமா என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. மனிதத் தன்மையற்ற இந்த குற்றத்தை செய்தவர்களும், செய்ய தூண்டியவர்களும் பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் தண்டிக்கப்பட வேண்டும்.

பெண் குழந்தையைப் பெற்றவர்கள் இந்த அரசை ஆதரிப்பார்களேயானால், தங்களின் மனசாட்சியை அடகு வைத்தவர்களாகவும், பெற்ற பெண் பிள்ளைகளை மறந்தவர்களாகவும் கருதப்படுவார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பிறப்பு உறுப்பில் காயங்கள் இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் கை விரல்களை வைத்து பரிசோதனை செய்வதே, இரட்டை விரல் சோதனையாகும். அந்த காயம்பட்ட இடத்தில் கை விரல் பட்டால் மேலும் வலி அதிகமாகும்.

இந்த இரட்டை விரல் சோதனை என்பது விஞ்ஞானபூர்வமானது அல்ல என்பதோடு, குழந்தைகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். 2013-ம் வருடமே இந்த இரட்டை விரல் சோதனையை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, இந்த சோதனை தனிநபர் அந்தரங்கத்தை மீறுவதோடு, உடலளவில், மனதளவில் காயப்படுத்தி அவர்களின் கண்ணியத்திற்கு கேட்டை விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், குழந்தை திருமணம் நடைபெற்றதாக அரசு அதிகாரிகளின், சமூக நலத்துறை அதிகாரிகளின் பொய்ப் புகாரின் பேரில், சட்டத்திற்கு புறம்பாக சிறு குழந்தைகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோயிலை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற திமுக அரசின் வெறியை, இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இந்து விரோத செயலுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் திமுக செல்லும் என்பதை இந்தக் கொடூரம் உணர்த்துகிறது.

தற்கொலை செய்துகொள்ள முயன்ற அளவிற்கு இதுபோன்ற ஒரு கொடுமையை குழந்தைகளுக்கு செய்யத் துணிந்த குரூர புத்தி கொண்ட மிருகங்கள் இனியும் அதிகாரத்தில், பணியில் நீடிக்க வேண்டுமா? இதற்கு காரணமானவர்களும், துணை நின்றவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இது குறித்து ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதல்வர் பதில் கூறாதது ஏன்? இந்தக் கொடூரத்தை அரங்கேற்ற சொன்னது யார்? குழந்தைகளை கொடுமைப்படுத்தியது ஏன்? சட்டத்தை மீறி செயல்பட அனுமதி அளித்தது யார்? தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? அரசன் அன்று கொல்லாவிட்டாலும், அரசனாக இருந்தாலும், இறைவன் நின்று கொல்வான். இது சத்தியம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu bjp asks tn government why not reply for governor letter