காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த குஷ்பு, பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் குஷ்பு. டெல்லியில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஷ்புவுக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
Advertisment
இந்நிலையில், டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மற்றும் குஷ்பூ சுந்தர் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
அதன்பின், சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களை குஷ்பூ சுந்தர் சந்தித்து வாழ்த்து பெற்றார் .
பின்பு, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், " கணவரின் நிர்ப்பந்தம் காரணமாக தான் பாஜகவில் இணைவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்தை முற்றிலும் மறுத்தார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள், தமிழக காங்கிரஸ் தலைவர்களின் தவறான சிந்தனைகளை பிரதிபலிப்பதாகவும் குஷ்பு வேதனை அடைந்தார். இந்தியா முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, தான் ஒரு நடிகை என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.
நான் ஏன் கட்சியில் இருந்து வெளியேறினேன் என்று யோசிக்க முடியாத மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாகத்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. திமுகவில் இருந்து வெளியேறிய போதும், நான் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. காங்கிரஸில் இருந்து வெளியேறும்போதும் நான் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. ஆனால், தவறாக விமர்சிக்கப்படும்போது அதற்கு பதிலடி கொடுத்துதான் ஆக வேண்டும்.
பாஜக தலைவர் முருகன் என்னிடம் பேசியதால்தான் நான் இன்று இந்த கட்சியில் சேர்ந்திருக்கிறேன். கட்சிப் பணிகளுக்காக, தலைவர் எல்.முருகன் ஒவ்வொருத்தரிடமும் பேசி இந்த கட்சியில்தான் நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் என்று பேசி புரியவைத்து அழைக்கிறார் என்று குஷ்பு தெரிவித்தார்.
ஜிஎஸ்டி, வேளாண் மசோதா, புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவைகள் காங்கிரஸ் கட்சி எதிர்க்க வேண்டிய காரணம் என்ன? என்று கூறிய குஷ்பு.... இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியில் தொடங்கப்பட்டது என்றும் தெரிவித்தார். நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க நரேந்திர மோடி அவர்கள் போன்ற தலைவர் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன், தமிழகத்தில் பாஜகவின் அடிமட்ட தொண்டராக செயல்பட உள்ளேன் என்றும் குஷ்பூ சுந்தர் தெரிவித்தார்.