Advertisment

காவல் துறையில் துப்பாக்கி பிடித்த கை இது; நேர்மையை பற்றி சி.வி சண்முகம் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் – அண்ணாமலை

சி.வி சண்முகம் ஆறு மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார், ஆறு மணிக்கு பின்பு ஒரு மாதிரி பேசுவார்; என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் அவர்களைப் பற்றி தோண்ட ஆரம்பித்து விடுவேன் – அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Annamalai at Kovai

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது

கோவையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தாமரை திருமண விழாவை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமரின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு 73 சீர்வரிசைகளோடு நாட்டு பசு மாடுகள் வழங்கி திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை கூடுதலாக இரண்டு ஜோடிகளுடன் சேர்த்து மொத்தம் 75 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Advertisment

மேலும், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சருக்கு தமிழக பா.ஜ.க சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருப்பது போல் காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், ஆனால் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. நிச்சயமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கியே ஆக வேண்டும். உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பு நமக்கு சாதகமாக தான் வரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் பிரச்சனை செய்து தண்ணீர் வாங்கினால் அதுவும் பிரச்சினையாக தான் அமையும். ஏனென்றால் கர்நாடகாவிலும் தமிழர்கள் உள்ளார்கள் நம்முடைய எல்லைப் பகுதிகளில் கன்னட மொழி பேசும் மக்களும் உள்ளார்கள். எனவே இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் இரண்டு மாநில அமைச்சர்களும் பேசி தீர்த்து இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக மௌனமாக இருந்ததால் நிலைமை கைமீறி மத்திய அரசிற்கு சென்று விட்டது. எனவே தமிழகத்திற்கு சாதகமாக முடிவு வரும் என்பதில் எள்ளளவு கூட பா.ஜ.க.,விற்கு சந்தேகம் இல்லை, என்று அண்ணாமலை கூறினார்

பின்னர், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உங்களுடைய (அண்ணாமலை) நடைபயணம் குறித்து விமர்சித்திருப்பது குறித்தும், அ.தி.மு.க துணையில்லாமல் பா.ஜ.க வெற்றி பெற முடியாது என்று பேசியிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "நல்ல போலீஸ்காரர்களை பார்த்தால் திருடனுக்கு பயம் வரத்தான் செய்யும். தேள் கொட்டியது போல தான் இருக்கும், அதுதான் என்னுடைய பதில். தரத்தை தாழ்த்தி நான் எப்பொழுதும் அவதூறான வார்த்தைகளை முன்வைக்க மாட்டேன். அரசியல் களம் மாறிவிட்டது என தலைவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இது இளைஞர்களுக்கான அரசியல், இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டிருந்தால் ஓட்டு போட முடியாது. எப்படிப்பட்ட தலைவர்கள் வரவேண்டும் என இளைஞர் சக்தி தீர்மானிக்கிறது. தமிழகத்தில் அந்த மாற்றம் வந்தே தீரும். அதனால் நல்ல ஒரு போலீஸ்காரனை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருப்பது சகஜம் தான் இதுதான் என்னுடைய பதில்" என தெரிவித்தார்.

இன்னொரு கட்சியை தாழ்த்தி தான் பா.ஜ.க முன்னேற வேண்டும் என்ற அவசியம் இந்த கட்சிக்கு இல்லை. எங்களுடைய உழைப்பில் இந்த கட்சி வளர வேண்டும். இதற்கு முன் யாரெல்லாம் தமிழகத்தில் அமைச்சர்களாக இருந்து வசூல் செய்து உள்ளார்களோ அவர்கள் அனைத்தையும் வசூலாக தான் பார்க்கிறார்கள். அவர்களெல்லாம் மந்திரிகளாக இருப்பதே வசூலிப்பதற்காகத்தான். அதனால் நாமும் நடைபயணம் மேற்கொண்டால் அதனையும் வசூல் என நினைத்துக் கொள்கிறார்கள். வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் மேன்மை என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது.

அவர் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பார்த்து பேசுகிறார். அவருடைய தொகுதிக்கு இன்னும் பா.ஜ.க செல்லவில்லை, போகும் பொழுது பாருங்கள். எங்கெல்லாம் பா.ஜ.க கட்சி இல்லை என்று கூறினார்களோ அங்கெல்லாம் சாதாரணமாக 12,000 மேற்பட்டோர் நடைபயணம் மேற்கொள்கிறார்கள். சும்மா பந்தலை போட்டு அமர வைப்பது பெரிதல்ல, தலைவரை நடந்து அமர வைக்க வேண்டும். சில தலைவர்களுக்கு கள அரசியல் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்வதற்கே இன்னும் 10 ஆண்டுகள் வேண்டும், எனவே பத்து ஆண்டுகள் கழித்து நான் அதைப் பற்றி பேசிக் கொள்கிறேன்.

என் மண், என் மக்கள் யாத்திரையில் பெருமளவு அனைத்து இடங்களிலும் பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள் இடமிருந்து தான் ஆதரவு கிடைக்கிறது. படித்துவிட்டு வேலை இல்லை என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள். அதனை அவர்கள் மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்குத்தான் அந்த மாற்றம் தேவைப்படுகிறது. அதேபோல் பெண்கள் டாஸ்மாக்கினால் அவர்களது மகன் அல்லது கணவர் இறப்பதை கண் முன் பார்க்கிறார்கள். இதை பாரதிய ஜனதா கட்சி நிவர்த்தி செய்யவும்.

17 முறை ராகுல் காந்திக்கு லாஞ்ச் அடெம்ப்ட் செய்தார்கள், ஆனால் பதினேழு முறையும் தோல்வியடைந்தது. ஏனென்றால் தன்மை இல்லை, மண்ணின் தன்மையும் மக்களின் எதிர்பார்ப்போம் ஒரு தலைவனுக்கு இருந்தால் தான் அவரை தலைவனாகவும் தொண்டனாகவும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேபோல் உதயநிதி ஸ்டாலினை safe seatல் அமர வைக்கலாம், அது பெரிய விஷயம் அல்ல, ஆனால் ஆளுகின்ற ஒரு தலைவன் வரும்பொழுது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உதயநிதி தனியாக வர முடியவில்லை ஒவ்வொரு மேடையிலும் 4 அமைச்சர்கள் உள்ளார்கள். எனவே அந்த நான்கு அமைச்சர்களும் அவர்கள் ஊரில் இருந்து வண்டிகளை திரட்டி கொண்டு மக்களை சேர்க்கிறார்கள். அப்படி இருந்தும் இருக்கைகள் காலியாக தான் உள்ளது. பொது நல விழாவிலும் கூட்டம் வரவில்லை என்றால் மக்கள் தி.மு.க.,வையும் உதயநிதி ஸ்டாலினயும் நிராகரித்துள்ளார்கள். அதனுடைய பிதற்றலாக தான் சனாதன தர்மம் இந்து தர்மத்தை அழிப்போம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணா திராவிடக் கொள்கையில் குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறிய மாமனிதர். கஷ்டப்பட்டு வந்து சுத்தமான அரசியலை கொடுக்க வேண்டும் என நினைத்தார், அப்படித்தான் அண்ணாதுரையையும் பார்க்க வேண்டும். ஆனால் தற்பொழுது அண்ணாதுரைக்கு சாதகமாக வருபவர்கள், அவரைப்போல் நடந்து கொள்கிறார்களா?. அண்ணாதுரையின் வழிப்படி அவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் கூறுகின்ற கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். அண்ணாதுரைக்கு நான்கு வளர்ப்பு குழந்தைகள் இருந்தார்கள், நான்கு பேரும் அரசியலுக்கு செல்லக்கூடாது எனக் கூறினார். தமிழகத்தில் எத்தனை பெயருக்கு அண்ணாதுரையின் குடும்பத்தினரை பெயர் தெரியும். ஆனால் இன்றைக்கு வந்தவர் போனவர்கள் எல்லாம் அவர்களது குடும்ப பெயரை போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள். அண்ணாதுரை எங்கே ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அங்கு நான் ஏற்றுக்கொள்கிறேன். எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை நமக்கு காண்பித்து சென்று இருக்கிறார்.

கலைஞர் கருணாநிதியை நாங்கள் மரியாதையாக தான் பேசுவோம். தி.மு.க.,வை விமர்சித்தாலும் கூட கலைஞருக்கும் எங்களுக்கும் கொள்கை வித்தியாசம் இருந்தால் அது பொதுவெளி அரசியல். பா.ஜ.க யாரையும் கடவுளாக பார்ப்பவர்கள் கிடையாது. எங்களை பொறுத்தவரை அனைவரும் மனிதர்கள் தான். அவர்களிடம் எங்களுடன் ஆன கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.

முத்துராமலிங்க தேவர் சனாதனத்திற்காக என்ன பேசினார் என்பதை சொல்ல வேண்டியதை என்னுடைய கடமை. அனைவரையும் கடவுளாக மாற்றி சரித்திரத்தை மாற்ற முடியாது. எனக்கே அடைமொழி கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அண்ணாதுரையை நான் என்றும் தவறாக பேசியது இல்லை. சம்பவத்தில் நடந்ததை எடுத்துக் கூறினேன். சனாதன தர்மத்தை பற்றி பேசும்பொழுது உண்மையை பேசுங்கள். என்னால் இன்னும் பல விஷயங்களை கூற முடியும். பெரியார் அடி வாங்கியதையும், அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ.,வை பற்றியும் கூற முடியும். ஆனால் அதற்குள் எல்லாம் நான் போகவில்லை. நீங்கள் ஒருவரை கடவுளாக பார்க்கிறீர்கள் என்பதற்காக நான் அவர்களை கடவுளாக பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

என்னிடம் மிரட்டல் உருட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி சண்முகம் ஆறு மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார், ஆறு மணிக்கு பின்பு ஒரு மாதிரி பேசுவார். காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது, எனவே நேர்மையை பற்றி சி.வி சண்முகம் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். அவர் மந்திரியாக இருக்கும் பொழுது என்னென்னவெல்லாம் செய்தார் என்பது எனக்கு தெரியும். அதற்குள் எல்லாம் நான் போகவில்லை. என்னை பொறுத்தவரை என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். இது என்னுடைய தன்மான பிரச்சினை.

கூட்டணி தேவைதான் ஆனால் அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கூனி கும்பிட்டு பதவிக்கு வந்தீர்கள் என்றால் அப்படிப்பட்ட அவசியம் பா.ஜ.க.,விற்கு கிடையாது. பா.ஜ.க தனித்தன்மையாக பவருக்கு வரும், 2026ல் வரும். அதுவும் பா.ஜ.க.,வாக மட்டும் தான் வரும். இன்னொரு கட்சியின் clone ஆகவோ பி டீமாகவோ சி டீமாகவோ வராது. எதையும் ஆட்டை போடுவதற்காக நான் வரவில்லை. சனாதான தர்மத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் காப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் நான். எனவே என் பேச்சு சூடாக தான் இருக்கும். யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவணங்காது, எங்களை பொறுத்தவரை அனைவரும் சமம்.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு சனாதான தர்மத்தை பற்றி தெரியவில்லை என்றால் அது கேவலம். குடும்ப ஆட்சியில் வருபவர்களுக்கு அதைப் பற்றி தெரியாது. 12ம் வகுப்பு புத்தகத்தில் சனாதனத்தை பற்றி விளக்கியுள்ளார்கள். இவர் சரியாகப் படிக்கவில்லை, எனவே இவருக்கு 70 வயதில் நாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டுமா. தமிழகத்தில் அனைவருக்கும் DVAC மீது பயம் உள்ளது.

கோவை குண்டுவெடிப்பை பொறுத்தவரை அலாவுதீனும் அற்புத விளக்கும் போல தோண்ட தோண்ட ஒவ்வொரு விஷயமாக வந்து கொண்டிருக்கிறது. NIA அதிகாரிகள் அடுத்த தாக்குதலை தடுத்துள்ளார்கள். ஆனால் இங்கு இருப்பவர்கள் அது புரிந்து கொள்ளாமல் ஓட்டு அரசியலுக்காக இந்தியாவின் இறையாண்மையை கேலிக் கூத்தாக்கியுள்ளார்கள். கோவையில் 82 வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஆச்சரியம் இல்லை. தி.மு.க கட்சியே அப்படித்தான், அது ஒன்றும் புதிது அல்ல. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இருந்த ஒரு கட்சி தி.மு.க. அப்படி இருக்க, இன்றைக்கு தி.மு.க கவுன்சிலர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்றால் அதைவிட ஒரு கேவலமான விஷயம் தமிழகத்திலேயே நடந்திருக்க முடியாது. தமிழகத்தில் மக்களையும் குறிப்பாக பெண்களையும் வஞ்சிக்கின்ற போக்கை தி.மு.க தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்பதை மகளிர் உரிமைத் தொகை மீண்டும் ஒருமுறை எடுத்து காண்பித்துள்ளது, ஏனென்றால் ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்களாக அது வழங்கப்படவில்லை.

கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று கூறுவதெல்லாம் என்ன ஒரு பேச்சு? மேடை இருக்கிறது மைக் இருக்கிறது என்று எதையும் பேசி விடக்கூடாது. என்னிடமும் அடித்து பேச ஆட்கள் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நேர்மையாக பேச வேண்டும். விஸ்வகர்மா திட்டத்தை பொருத்தவரை மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்றாலும், அத்திட்டம் சிறப்பாக செயல்படும். என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் அவர்களைப் பற்றி தோண்ட ஆரம்பித்து விடுவேன், நான் தோண்டுவேன் என்பதும் தெரியும், எந்த அளவுக்கு தோண்டுவேன் என்பதும் தெரியும், சில பெயரின் மீது தோண்ட வேண்டாம் என வைத்திருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Admk Coimbatore Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment