சனாதன தர்மம் குறித்த கருத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழக பா.ஜ.க பிரதிநிதிகள் ஏ.டி.ஜி.பி.,யை சந்தித்து மனு அளித்தனர்.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்று நோய். சனாதனத்தை எதிர்க்கக் கூடாது, ஒழித்தே ஆக வேண்டும் என பேசினார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது.
இதனையடுத்து உதயநிதிக்கு எதிராக தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் தமிழக பா.ஜ.க பிரதிநிதிகள் ஏ.டி.ஜி.பி.,யை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
மனு அளித்தப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க, மாநில துணை தலைவர் பால் கனகராஜ் கூறுகையில், ''தமிழகம் முழுவதும், பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வந்தாலும், புகார்கள் எதுவும் ஏற்கப்படவில்லை.. அமைச்சர் வெறுக்கத்தக்க வகையில் பேசி இருந்தாலும், புகார்கள் ஏற்கப்படவில்லை. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள், இங்கு புகார் அளித்தோம். அந்த மனுவை ஏ.டி.ஜி.பி அருண் பெற்றுக்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்,” என்று கூறினார்.
சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் குறித்து உதயநிதி ஸ்டாலினும், ஆ.ராஜாவும் கூறியது குறித்து கருத்து தெரிவிக்கையில், சட்டத்தை காக்க வேண்டியவர்கள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம், "தமிழகத்தின் சாமானியர்களை நினைத்து பரிதாபப்பட மட்டுமே முடியும். அரசியல் சாசனத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் வெறுப்புப் பேச்சை, உயர்கல்வித்துறை அமைச்சரும், பள்ளிக் கல்வி அமைச்சரும் ஆமோதித்து வருகின்றனர். சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். சட்டத்தை பின்பற்றுபவர்கள் இந்த பழிவாங்கும் திமுகவின் கைகளில் பலியாகிறார்கள்," என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“