தென்னை விவசாயிகளைக் காக்க தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜன.5.”ம் தேதி நடைபெறுகிறது என பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தென்னை விவசாயிகளைக் காக்க பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயும் சேர்த்து வழங்கிடக்கோரியும் தென்னை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
வரும் ஜனவரி 5″ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கி தென்னை விவசாயத்தைக் காப்பற்றக்கோரி தென்னங்கன்றுகளோடு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆர்ப்பாட்டக்களத்திலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவசத்தேங்காய் கொடுத்து தேங்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படவுள்ளது. தமிழகத்தின் முக்கிய விளைபொருளான உணவுப்பொருளான தேங்காய் கடந்த ஒரு வருடமாக தமிழக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் விலைமிகவும் குறைந்து கோடிக்கணக்கான தேங்காங்கள் தோப்பில் தேங்கிக்கிடக்கின்றன.
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான கொப்பரை தேங்காய்க்கு ரூ.108.65 தற்போது வழங்கப்பட்டும், அதிமுக ஆட்சிக்காலத்தில் கிலோ ரூ.110க்கு விற்ற கொப்பரைத்தேங்காய் தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.80-க்கு குறைந்தது. கடும் விலைச்சரிவால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசின் அதிகாரிகளும், இடைத்தரகர்களுமே முக்கிய காரணியாக இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 4.63 இலட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தேசிய அளவில் தேங்காய் உற்பத்தியில் 31.5% பங்கு வகிக்கிறது. திமுக அரசின் மெத்தனத்தால் பல கோடி தேங்காய்கள் தேங்கியுள்ளன.
எனவே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்போடு ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு தேங்காய்- வீதம் 2 கோடியே 20 இலட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேங்காய்கள் வழங்கினால் அதன்மூலம் 4 கோடியே 40 இலட்சத்து 80 ஆயிரம் தேங்காய்கள் தென்னை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.
இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும். எனவே பொங்கல் தொகுப்போடு குடும்பத்திற்கு இரண்டு தேங்காய் வீதம் சேர்த்து வழங்க வேண்டும். பள்ளி சிறுவர் – சிறுமியர்களுக்கு மதிய சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பாலை வழங்க வேண்டும். தேங்காயில் உள்ள தாய்ப்பாலுக்கு இணையான மோனோலாரி என்ற சத்து நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதோடு சிறந்த ஊட்டச்சத்தாகவும் விளங்குகிறது.
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை விநியோகம் செய்ய வேண்டும். பல்வேறு இடர்ப்பாடுகளால் நஷ்டத்தில் இயங்கிவரும் தேங்காய் மட்டைத்தொழிற்சாலைகளை காப்பாற்ற தமிழக அரசு தனிக்குழு அமைத்து, அவை மீண்டுவர ஆவண செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் தென்னை விவசாயிகள் மற்றும் தென்னைசார்பு மீது தமிழக அரசு காட்டும் கெடுபிடிகளை தளர்த்தி வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil