ஊழலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பிலான பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்தநிலையில், பாதயாத்திரைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்; ஆலோசித்தது என்ன?
அதன்படி, ராமேஸ்வரத்தில் தொடங்கும் பாதயாத்திரை சென்னையில் நிறைவடைகிறது. இந்த பாதயாத்திரையை வரும் 28 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 6 மாதங்கள் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, சென்னையில் ஜனவரி 11 ஆம் தேதி பாதயாத்திரையை நிறைவு செய்கிறார்.
தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார். பாதயாத்திரை தொடங்கிய 110 ஆவது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார். 50 ஆவது நாள் நடைபயணம் பரமத்தி வேலூரிலும், 100 ஆவது நாள் நடைபயணம் வந்தவாசி மற்றும் உத்திரமேரூரிலும் நடைபெற உள்ளது.
அட்டவணையின்படி ராமநாதபுரத்தில் வரும் 28ஆம் தேதி பாதயாத்திரை தொடங்கும் அண்ணாமலை, அந்த மாவட்டத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். 31 ஆம் தேதி சிவகங்கை செல்லும் அண்ணாமலை மானாமதுரை, திருப்பத்தூர், அறந்தாங்கி, திருமயம் வழியாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி காரைக்குடி செல்கிறார்.
பின்னர் மதுரை மாவட்டத்தில் 4, 5 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்லும் அண்ணாமலை 6 ஆம் தேதி ஓய்வெடுக்கிறார். இதைத்தொடர்ந்து மதுரையில் 7ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை உரையாற்றுகிறார்.
பின்னர் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 14 ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் வழியாக மேற்கு மாவட்டங்களுக்கு செல்கிறார். அக்டோபர் மாதங்களில் மத்திய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் மற்றும் டிசம்பரில் வடக்கு மாவட்டங்களில் நடைபயணம் செய்யும் அண்ணாமலை அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், பாதயாத்திரைக்கு பாதுகாப்பு கோரி, டி.ஜி.பி சங்கர் ஜிவாலிடம் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்கள் பால் கனகராஜ், சக்கரவத்தி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil