Advertisment

2026 தான் இலக்கு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பா.ஜ.க அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Annamalai K 1

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த 2023 ஆம் ஆண்டு திடீரென்று மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவருடைய தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவரும் உடல் நலக்குறைவால் சமீபத்தில் மரணம் அடைந்தார். எனவே ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கியது. 

இந்தநிலையில், இந்தமுறை அந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. இதனால் தி.மு.க நேரடியாக களம் இறங்குகிறது. தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். சந்திரகுமார் இந்தத் தொகுதியின் முதல் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisement

இதற்கிடையே பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ள நிலையில் தே.மு.தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனையடுத்து பா.ஜ.க போட்டியிடுமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் புறக்கணிப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

”கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சட்டமேதை அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், தி.மு.க.வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க தி.மு.க.வை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு.” இவ்வாறு அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Bjp Annamalai Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment