எஸ்.பி.வேலுமணி வீட்டு திருமணத்திற்கு அழைத்து இருந்தார்கள், சென்று இருந்தேன் எனவும், அ.தி.மு.க உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நாளைக்கு பதில் அளிக்கிறேன் எனவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பா.ஜ.க வுடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த மறுப்பும் தெரிவிக்காதது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ”சென்னை போய்விட்டு நாளை மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறேன், இது அவசரத்தில் பேசும் சப்ஜெக்ட் அல்ல, பொறுமையாக பேசுகிறேன்” என அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்ந்து அமித்ஷா கோவை வந்து சென்ற பின்னர் தான் அரசியல் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு, ”அமித்ஷா இரண்டு நாட்களில் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார், அப்புறம் எத்தனை மாற்றம் வரும்?” எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்ல திருமணத்தில் கலந்து கொண்டது குறித்த கேள்விக்கு, “எஸ்.பி.வேலுமணி வீட்டில் திருமணத்திற்கு அழைத்து இருந்தார்கள், சென்று இருந்தேன், கல்யாணத்திற்கு போவது கூட தவறா? என அண்ணாமலை தெரிவித்தார்.
ஆனால் அந்த எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லையே என்று கேட்டதற்கு, “எடப்பாடி பழனிச்சாமி ரிசப்ஷனுக்கு வருவார் என நினைக்கிறேன்” என அண்ணாமலை பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை விமானம் மூலம் சென்னை கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.