/indian-express-tamil/media/media_files/2025/03/30/OhccOaxICm92GdQTVAU2.jpeg)
கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அண்ணாமலை பேசினார்.
தமிழகத்தில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதில் மூன்று மண்டலங்களில் வெற்றி பெற வேண்டும். மூன்று மண்டலங்களில் ஜெயிக்காமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. தென் தமிழகத்தின் சூழல், மதுரை வட்டாரத் தொகுதிகள் மற்றும் கொங்கு பகுதி தொகுதிகளின் தனித்தன்மை குறித்து டெல்லியில் கட்சித் தலைமையுடன் ஆலோசித்தேன். ஆனால், டெல்லியில் என்ன பேசினேன் என்பதை வெளியிட்டால் தவறாகப் போய்விடும்.
ஜாதிகள் வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால், வாக்குச் செலுத்துவதில் ஜாதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கட்சியின் தலைவராகவும் தொண்டனாகவும் மைக்ரோ லெவலில் அனைத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க மற்றும் தமிழக நலனே எனக்கு முக்கியம். தொண்டனாகப் பணியாற்றத் தயார் என்று டெல்லியில் தெரிவித்துள்ளேன்.
கூட்டணி பற்றி இப்போது பேச விரும்பவில்லை. டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் உள்துறை அமைச்சர் பேசியதை இறுதிக் கருத்தாகக் கொள்ளுங்கள்.
பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வரவுள்ளார். அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மதுரை வழியாகத் திரும்புவார். தேர்தலுக்குப் பின் பிரதமரின் முதல் தமிழகப் பயணம் இதுவாகும்.
மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறினால் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும். இதில் விருப்பு-வெறுப்பு பார்ப்பதில்லை. விஜய்க்கும் பா.ஜ.க.,வுக்கும் எந்த உடன்பாடும் இல்லை.
செங்கோட்டையன் பயணம் குறித்து யூகங்கள் எழுதப்படுகின்றன. பா.ஜ.க.,வுக்கு யாரையும் மறைமுகமாகச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு மாநில எதிர்க்கட்சித் தலைவர் உள்துறை அமைச்சரைச் சந்திப்பதில் தவறில்லை. அ.தி.மு.க,வின் உள்ளகப் பிரச்சினைகளில் பா.ஜ.க தலையிடாது. எடப்பாடி பழனிசாமி அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்.
பா.ஜ.க.,வில் முதல்வர் வேட்பாளர் இல்லை. விஜய் தன் கட்சியில் வேட்பாளர், அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர். ஆனால், பா.ஜ.க யாரையும் முதல்வராக முன்மொழிவதில்லை. இருப்பினும், தமிழகத்தில் எங்கள் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. என்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பா.ஜ.க.,வின் வளர்ச்சியே எனக்கு முதன்மையானது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்காலத்தில் பெரிய வெற்றி பெறும். கட்சியின் முடிவுகள் தொலைநோக்கு பார்வையுடன் இருக்கும். வருங்காலத்தில் என்னைப் பார்ப்பீர்கள். எதையும் மாற்றிப் பேசுபவன் நான் அல்ல. பா.ஜ.க.,வின் தலைமை சரியான முடிவுகளை எடுக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.