Advertisment

கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை

கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
annamalai criminal case

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, தி.மு.க எப்போதும் தயங்கியதே இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 4 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 50000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு பட்டிசேரி எனும் இடத்தில், பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணையை கட்டியது. அதற்கு தமிழகத்தில் அனைத்துகட்சியினரும் கடும் ஆட்சேபனை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, இடுக்கி மாவட்டம் பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதியாகும். இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனையடுத்து இம்முயற்சிக்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேரள அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; 

“காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது தி.மு.க அரசு. 

ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, தி.மு.க எப்போதும் தயங்கியதே இல்லை. 

ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த தி.மு.க, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 

உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

CM stalin Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment