/indian-express-tamil/media/media_files/2025/05/27/8qNP7VyIc0uI1UoyK2oG.jpeg)
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற கோவைக்கு வந்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்பொழுது நயினார் நாகேந்திரன் பேசும்போது, நீண்ட காலம் நண்பர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தேன். நாளை மறுதினம் காலை மதுரையில் நடைபெறும் அறுபடை முருக பக்தர்களின் மாநாட்டின் கால்கோள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று கூறினார்.
பின்னர் டாஸ்மாக் ஊழல் பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு, டாஸ்மாக் ஊழலை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறோம். அமலாக்கத்துறை அதில் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கி இருக்கிறது. அதில் சம்பந்தப்பட்ட துணை முதலமைச்சரின் நண்பர்களாக இருக்கக் கூடிய ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை விசாரித்தால் தெரியும் என்று அமலாக்கத் துறை ஏற்கனவே கூறியது. ஆனால் ஆகாசும், ரித்தீஷும் லண்டனுக்கு சென்று விட்டார்கள். ஆனால் சிலர் இங்கு தான் எங்கேயோ? தலைமறைவாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இ.டி அதில் தலையிடக் கூடாது என இடைக்கால தடை வாங்கப்பட்டு இருக்கிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாங்கள் இ.டி-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று கூறி இருக்கிறார். ஆனால் 2011 ஆம் ஆண்டு தேர்தல் நடக்கும் போது, அங்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது, அன்று இ.டி- க்கு பயந்து தான் பேச்சுவார்த்தையை முடித்தார்களா என்பது தெரியவில்லை. அன்றில் இருந்தே அவர்களுக்கு பயம் இருக்கிறது. அதனால் தான் பயப்பட மாட்டோம் எனக் கூறி இருக்கிறார். அப்படி பயமில்லை என்றால் ரித்தீஷும், ஆகாசம் வெளிநாட்டிற்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
தி.மு.க ஆட்சியில் டாஸ்மாக்கில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, அதேபோல அ.தி.மு.க ஆட்சியிலும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, அ.தி.மு.க சம்பந்தப்பட்ட டாஸ்மாக் வழக்குகளில் நீங்கள் இ.டி ரைடு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு, யார் ஆட்சி செய்தாலும், எங்களைப் பொறுத்த வரை நீதி என்பது நிச்சயம் வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
ராஜ்யசபா தேர்தல் குறித்த கேள்விக்கு, ராஜ்யசபா தேர்தல், கூட்டணி இதெல்லாம் தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல முடியாது. இதைப் பற்றி எல்லாம் தலைமை தான் முடிவு செய்யும். எங்களிடம் இருப்பது நான்கு சீட்டுகள், அதன்படி தலைமை என்ன கூறுகிறார்களோ? அதை நாங்கள் கேட்போம் என்று கூறினார்.
பொதுக் கூட்டத்தில், குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என இ.பி.எஸ் கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டு சொல்லிக் கொண்டு இருக்கிறேன், தி.மு.க ஆட்சியினால் மக்களுக்கு நிறைய சிரமங்கள் இருக்கிறது. சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம், தொழிற்சாலைகள் நடத்த முடியாமல் உள்ளது, கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல், சட்டம் ஒழுங்கு அனைத்துமே சீர்கெட்டு கிடக்கிறது. இல்லை என்றால் மக்களுக்கு விரோதமாக இருக்கிறது. அனைத்து கட்சிகளுமே ஓரணியில் திரள வேண்டும் என்பதைத் தான் நாங்கள் எங்களுடைய வேண்டுகோளாக வைக்கிறோம் என்று கூறினார்.
கல்வி நிதி ஒதுக்காததால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, நிச்சயம் எந்த மாணவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். தமிழக முதல்வர் ஏற்கனவே டெல்லி சென்று இருந்தார். நிச்சயம் டெல்லி சென்ற பொழுது இதைப்பற்றி அவர்கள் கூறியிருப்பார்கள். இவர்கள் மும்மொழி கொள்கைக்கு எவ்வளவு செலவு செய்வோமோ? அந்த தொகையை கேட்கிறார்கள், ஆண்டுதோறும் கொடுக்கப்படக் கூடிய தொகையை கொடுத்து விட்டோம் என்று கூறினார்.
யு.பி.எஸ்.சி தேர்வில் பெரியாரின் பெயரை சாதி பெயரோடு சேர்த்தது குறித்த கேள்விக்கு, என்னை பொறுத்தவரை ஜாதி பெயர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என நயினார் நாகேந்திரன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.