மத்திய அரசு அறிவித்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் டெல்லியில் 23-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சமாதாப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால் இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளிடம் கலந்துரையாட தமிழக பாஜக முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஒருமாத காலம் வேல் யாத்திரையை வெற்றிகரமாக முடித்த பாஜக, அடுத்ததாக மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து டெல்டா விவசாயிகளிடம் கலந்துரையாடும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையிலான பாஜகவினர் டிசம்பர் 19 (இன்று) முதல் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாட‘மோடி விவசாயிகள்’ சிறந்த நண்பர் ’என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள, மாநிலத் தலைவர் எல்.முருகன் டிசம்பர் 19 ஆம் தேதி (இன்று) பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகள் அமைப்புகளுடன் பிரச்சார கூட்டங்களை நடத்துகிறார்.
மேலும் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி கே சிங் நாளை (டிசம்பர் 20) தஞ்சாவூரில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் விவசாயிகளுடன் மொத்தம் 14 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் 'விவசாயிகளுக்கு எதிரானவர்கள்' என்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் விவாதத்தை மறுப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். இதனால் தமிழக பாஜகவினர் விவசாயிகள் சங்கங்களையும் அவற்றின் பிரதிநிதிகளையும் சந்தித்து, சர்ச்சைக்குரிய சட்டம் என கூறப்படும் வேளாண் சட்டங்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்க இந்த பிரச்சாரம் முடிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பிரச்சாரம், "இது எதிர்க்கட்சிகளின் தவறான தகவல் மற்றும் பிரச்சாரங்களையும் அகற்றும்" என்று பாஜக மாநில ஐடி பிரிவு தலைவர் சி டி ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"