2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று சமீபத்தில் அக்கட்சியில் இணைந்திருந்த வி.பி. துரைசாமி தெரிவித்துள்ள கருத்து, தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சென்ற வாரம் வரை தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, திமுக vs அதிமுக என்கிற நிலைமைதான் இருந்தது. ஆனால், சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பின்னர், களம் என்பது திமுக vs பாஜக என மாறியுள்ளது. நாங்கள் வெகு வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீங்கள் இருக்க மாட்டீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று தெளிவாக சொல்லிவிட்டேனே. அதிலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ளதே என்று துரைசாமி கூறினார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தினமும் ஆளுக்கொரு கருத்தாக தெரிவித்து வருவதால் சங்கடத்திற்குள்ளாகியுள்ள அதிமுகவுக்கு விபி துரைசாமியின் இந்த கருத்தும், அதிர்ச்சி அளிக்க செய்துள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி : பாஜக தலைமையில்தான் கூட்டணி என்ற கருத்தை அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறவில்லை. பாஜக தலைமையில்தான் கூட்டணி என அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறினால் உரிய பதிலை அதிமுக தெரிவிக்கும். கூட்டணி பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.
அதிமுக என்ற ஆலமரம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது; இந்த மரம் அழியாது.
எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல வேண்டும் என்பது ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம். எஸ்.வி.சேகர் தேசியக்கொடியை அவமதித்து, முதல்வரை அவதூறாக பேசியதை ஏற்க முடியாது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவை கட்சி உரிய நேரத்தில் எடுக்கும். முதல்வர் வேட்பாளர் பற்றி பொதுவெளியில் பேசுவது கட்சியை பலவீனப்படுத்துவதாக அமையும். எடப்பாடி பழனிசாமிதான் என்றும் முதல்வர் என கூறிய ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல. அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த விபி துரைசாமியின் பேச்சு, அதற்கு அதிமுகவின் பதிலடி உள்ளிட்ட கருத்து மோதல்களால், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தற்போதே அரசியல்களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.